”தனியாருக்கு எதற்கு ரூ.270 கோடி..? 70 கோடியில் தூய்மை பணியாளருக்கு பணி நிரந்தம் கொடுக்கலாம்”- சீமான்
தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய 70 கோடி ரூபாய் தான் செலவாகும் என்றும், ஆனால் தனியார் நிறுவனத்திற்கு 270 ரூபாய்க்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை கண்ணகி நகரில் தூய்மைப் பணியின்போது மின்சாரம் தாக்கி வரலட்சுமி என்ற தூய்மை பணியாளர் உயிரிழந்தார். அரசியல் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நிலையில், உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த தூய்மை பணியாளர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய சீமான், தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கவேண்டும் என்று பேசினார்.
எதற்காக தனியார் நிறுவனத்திற்கு 270 கோடி?
தூய்மைப் பணியாளர் மரணம் குறித்து பேசிய சீமான், ”அரசு மற்றும் அரசு அதிகாரிகளுடைய அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்துள்ளது, சகோதரி வரலட்சுமி இறந்ததை விபத்து என கூற முடியாது. அரசு மற்றும் அரசு அதிகாரிகளுடைய அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே 19ஆம் தேதி இந்த குறிப்பிட்ட பகுதியில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது என புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என குற்றஞ்சாட்டினார்.
மேலும் தனியார் நிறுவனத்திற்கு எதற்கு 270 கோடி ரூபாய் என கேள்வி எழுப்பிய சீமான், “அரசு செய்யவேண்டிய வேலைகளை கூட தனியாருக்கு கொடுத்துவிட்டால் அரசு எதற்கு. குப்பைகளை அள்ள தனியார் நிறுவனத்திற்கு 270 கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்றீங்க, அதில் 70 கோடி ரூபாய் இருந்தாலே தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் கொடுத்துவிடலாம். மீதமிருக்கும் 200 கோடி ரூபாய் எங்கே போகிறது, ஏன் அதை தனியாருக்கு கொடுக்கவேண்டும். ஒரு கிலோ குப்பையைஅ அல்லை 12 ரூபாய் எனவும், ஒரு டாய்லெட்டை சுத்தம் செய்ய 350 ரூபாய் என்றும் கணக்கு காட்டப்படுகிறது. இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? தூய்மை பணியாளர்களின் உழைப்பை சுரண்டி தனியார் நிறுவனம் சாப்பிட வேண்டுமா.
பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கேட்குறாங்க, கொரோனா காலத்தில் தேவதைகளாக தெரிந்த செவிலியர்கள் கேட்குறாங்க பணி நிரந்தம் கொடுங்கனு, அரசு மருத்துவர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கேட்குறாங்க இது எதுவுமே வேண்டாம் என்றால் எதற்கு அரசு” என குற்றஞ்சாட்டினார்.