"விஜய்க்கு பின்னால் நண்பா நண்பிகளாக இருக்கலாம்; ஆனால் எனக்கு.." - சீமான்
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை அருகே பாராபத்தியில் இன்று நடைபெறுகிறது. மாநாட்டுக்கான பணிகள் ஒருவாரம் முன்பிலிருந்தே தீவிரமாக நடந்து வரும் நிலையில், தவெக தொண்டர்கள் நேற்றிலிருந்தே மாநாடு நடைபெறும் இடத்திற்கு வரத்தொடங்கிவிட்டனர். மாநாட்டில் தவெக தலைவர் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிலிருந்து அரசியல் கட்சிகள் வரை எழுந்து வருகிறது.
இந்நிலையில், தொடர்ந்து தவெக-வையும், தவெக தொண்டர்களையும் கடுமையான முறையில் விமர்சித்து வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று நடைபெறும் தவெக மாநாடு குறித்து சென்னை விமான நிலையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு குறித்து செய்தியாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-
“தவெக மாநாட்டின் கொடி உள்ளிட்டவைகள் அகற்றப்படுவதாக தவெக-வினர் தெரிவிக்கின்றனர். அவர்களுக்காவது கொடிகள் , பேனர்கள் உள்ளிட்டவை வைத்த பிறகு தான் அகற்ற சொல்கிறார்கள். ஆனால், எங்களுக்கு வைக்கும் முன்பே தடை போடுகிறார்கள். நெருக்கடிகளை சமாளித்து தான் வரவேண்டும்.
மேலும், விஜய் முன்வைக்கின்ற தத்துவங்களை வைத்து தான் நான் தவெக-வை எதிர்க்கிறேன். 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இந்த திராவிட கட்சிகளின் ஆட்சிதான் இருந்து வருகிறது. அதே அரசியலை பேசுவதற்கு இன்னொரு கட்சி தேவையில்லை. இந்த திராவிட கட்சிகளிலிருந்து நான் மாற்றாக இருந்து வருகிறேன். அவர் பின்னால் திரண்டுள்ள ரசிகர்கள் நண்பா மற்றும் நண்பிகளாக இருக்கலாம். ஆனால் எனக்கு தம்பி மற்றும் தங்கைகளாக இருக்கிறார்கள். அவர்களது அனைவரது நலனுக்காகத்தான் நான் போராடுகிறேன்.
திமுக-வை மன்னர் ஆட்சி என சொல்லும் விஜய் முதலில் காங்கிரஸ் கட்சியை தான் எதிர்க்க வேண்டும். நேரு-விலிருந்து தொடங்கி ராகுல்காந்திவரை காங்கிரஸில் யார் இருக்கிறார்கள். அப்படி பார்த்தால் முதலில் விஜய் காங்கிரஸை தான் எதிர்க்க வேண்டும். அதை ஏன் விஜய் பேச தயங்குகிறார். தவறை யார் செய்தாலும் தவறுதான், எல்லோரைப்பற்றியும் தான் பேச வேண்டும், ஒருவரைப்பற்றி மட்டும் பேசுவது சரியான அரசியலாக இருக்காது” என்று பேசினார்.