பேசுவதற்கெல்லாம் குண்டாஸ் போடும் அரசு கொலைக்கு என்ன வழக்கு போடுவாங்க? - சீமான் கடும் விமர்சனம்

தமிழகத்தில் சட்டம் இருக்கிறது ஆனால் ஒழுங்கு இல்லை, தனக்கு ஓட்டு போட்டவர்கள் மட்டும்தான் வாழவேண்டும் என்றால் இந்த மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் பதவிக்கு வந்திருக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
Seeman
Seemanpt desk

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே மைலோடு பகுதியில் ஆர்.சி. கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ளது. இத்தேவாலய வளாகத்தில் அமைந்துள்ள பங்குத்தந்தை அலுவலகத்தில் கடந்த 20-ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும் அரசு போக்குவரத்துக் கழக ஊழியருமான சேவியர் குமார் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

இக்கொலை வழக்கில் இரணியல் காவல் நிலையத்தில், திமுக தக்கலை ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு, மைலோடு கிறிஸ்தவ தேவாலய பங்குத் தந்தை ராபின்சன் உட்பட 15 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

Protest
Protestpt desk

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பாதிரியார் ராபின்சன் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனிடையே நேற்று முன்தினம் கல்குளம் தாசில்தார் தலைமையில் சேவியர் குமார் உடலை நீதிமன்ற ஆணைபடி மைலோடு கல்லறைத் தோட்டத்தில் போலீசார், நல்லடக்கம் செய்தனர்.

இக்கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான திமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு உட்பட கொலையாளிகளை கைது செய்வதில் காவல்துறை தாமதம் காட்டுவதாக குற்றம்சாட்டி இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட நிர்வாகிகள், தமிழக அரசையும், காவல்துறையையும் கண்டித்து கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான்... “கொலை நடந்து இத்தனை நாட்களாகியும் அரசு மெத்தனமாக உள்ளது. தேவாலயத்தில் அழைத்து பேச்சுவார்த்தை எனக் கூறி அடித்துக் கொலை செய்யப்பட்டு தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பாதிரியார்களை எப்படி இறைவனின் தூதுவர்கள் என்று கூறுவது? சரணடைந்த பாதிரியார் ராபின்சனை போலீசார் இதுவரை விசாரிக்கவில்லை, காவல்துறை ஏன் இன்னும் கொலை சம்பந்தமாக அறிக்கை வெளியிடவில்லை,

Seeman
Seemanpt desk

பேசுவதற்கெல்லாம் குண்டாஸ் போடும் அரசு, கொலைக்கு என்ன முறையில் வழக்குப்பதிவு செய்வார்கள், குற்றவாளி தலைமறைவாகி விட்டார் என்று கூறுவதற்கு வெட்கமாக இல்லையா? இந்த வழக்கில் கொலைக்கு துணை போகிறார்களா என்று கூறுவதை விட குற்றவாளிகளே திமுகதான். தமிழகத்தில் சட்டம் இருக்கிறது ஆனால் ஒழுங்கு இல்லை, சட்டம், ஒழுங்கு இருந்திருந்தால் இது போன்ற கொலைகள் நடந்திருக்காது. எத்தனை பேரை வெட்டிக் கொன்றாலும் அவர்களை காப்பாற்ற ஆட்சி, அதிகாரம் இருக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களை அவர்கள் மறக்கலாம் ஆனால், நான் மறக்க மாட்டேன்" என்று கூறினார்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com