கோவை | 6 தொகுதிகளில் நாதக வேட்பாளர்கள் அறிமுகம்.. விஜயை விமர்சித்த சீமான்!
”திரைத் துறையில் இருப்பதுபோல அரசியலிலும் தவெக தலைவர் விஜய்க்கு இயக்குநர் தேவைப்படுகிறார்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கோவையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் அம்மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்துவைத்தார். அதில், கோவை தெற்கில் பேரறிவாளன், கவுண்டம்பாளையத்தில் கலாமணி ஜெகநாதன், சிங்காநல்லூரில் நேரு, வால்பாறையில் உமாதேவி, மேட்டுப்பாளையத்தில் கோபாலகிருஷ்ணன், தொண்டாமுத்தூரில் ரஜிப்பூர் நிஷா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இக்கூட்டத்தில் பேசிய அவர், தவெக தலைவர் விஜயைக் கடுமையாக விமர்சித்தார்.
அவர், “திரைத் துறையில் இருப்பதுபோல அரசியலிலும் தவெக தலைவர் விஜய்க்கு இயக்குநர் தேவைப்படுகிறார். தமிழக வெற்றிக் கழகம் ஒரு தற்குறி. ’நான் அவ்வளவு உச்சத்தை விட்டுவிட்டு வந்தேன்’ என்கிறார் விஜய். யார் வரச் சொன்னது? எதற்காக வருகிறார்? என் அன்புச் சகோதரர் அஜித்தும், ரஜினிகாந்தும் தங்கள் புகழை வியாபாரம் செய்ய விரும்பவில்லை. எம்.ஜி.ஆர் ஒன்றரை மணி நேரமானாலும் எழுதி வைக்காமல் படிப்பார்; விஜயகாந்த் மனதிலிருந்து மக்களின் மொழியில் பேசுவார்; ஸ்டாலின்கூடத் துண்டுச்சீட்டுதான். ஆனால், எடப்பாடியும் தம்பியும் முழுச்சீட்டுத்தான். இவர்களால் மழையில் பேச முடியாது; ஏனெனில், சீட் நனைந்துவிடும். பார்த்து எழுதும் மாணவன், படித்து எழுதும் மாணவன்.. இருவரில் யார் சிறந்தவர் என பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.
மேலும் அவர், “நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் என்ற வரலாற்று உண்மையை உணர்த்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சியை கோவையில் நடத்தினால் சரியாக இருக்கும் என நினைத்து நடத்தி வருகிறோம். கதைகளில்கூட தமிழன் உயர்வாக இருந்தான். வள்ளுவன், கம்பன், கபிலர் எல்லாம் உலகத்தைப் பற்றிப் பேசியுள்ளார்கள். ஓநாய் போன்று கழுத்தைக் கடித்தவர்கள் திராவிடர்கள். கச்சத்தீவைக் கொடுத்துவிட்டு இப்போது எங்கு போராடப் போகிறீர்கள்? பெரியார், ’தமிழில் பேசினால் பிச்சைகூட எடுக்க முடியாது’ என்றார். ஆனால் கடைசிவரை தமிழில் பேசி, தமிழில் எழுதி பிச்சை எடுத்தவரும் அவர்தான்.
மொழியை அழிப்பதில் அவர்கள் சாதித்தார்கள். ’ஆங்கில மொழி நமக்கு அறிவாகும்’ என்று கூறுகிறார்கள். அப்படியென்றால், அடுத்த மொழி எப்படி எனக்கு அறிவாகும் எனக் கேட்டிருக்க வேண்டும். ஆங்கிலம் படித்தவர்கள் அறிவாளிகளா? அவர்கள்தான் அதிகம் கொள்ளையடிக்கிறார்கள். இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால் எதற்கு கோடிக்கணக்கானோர் இங்கு பணிபுரிய வருகிறார்கள்? மாடு மேய்க்க மாட்டேன் எனக் கூறுகிறார்கள். ஆனால் மாடு, ஆடுகளை நபிகள், இயேசு, கிருஷ்ணர் எல்லாம் மேய்த்துள்ளார்கள். எந்த தொழிலும் இழிவல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.
முன்னதாக கோவை விமான நிலையத்தில் பேசிய அவர், “விஜயை விட அஜித்திற்கு அதிக கூட்டம் வரும். அஜித், ரஜினி, நயன்தாரா வந்தாலும் கூட்டம் கூடும். கூட்டத்தைப் பார்க்கக் கூடாது, கொள்கையை பார்க்க வேண்டும். கொள்கை இல்லாத கூட்டம் வீணாகத்தான் போகும்” என விமர்சித்தார்