நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்த நாளை முன்னிட்டு ட்விட்டரில் பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளவர் சீமான். திமுக, அதிமுகவிற்கு மாற்று சக்தியாக தேர்தலில் தனித்து களம் கண்டு வருகிறார். வெற்றி, தோல்விகளை பற்றி கவலைப்படாமல் ஒவ்வொரு தேர்தலின்போதும் முதல் ஆளாய் வேட்பாளர்களை நிறுத்திவிடுவார். பல விமர்சனங்கள் அவர் மீது முன்வைக்கப்பட்டு வந்தாலும் சீமானை ஏராளமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சீமான் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி ட்விட்டரில் பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் பலரும், சீமானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
திரைப்பட இயக்குநரான பாராதிராஜாவும் சீமானுக்கு ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ உனக்கான காலம் வெகுதூரம் இல்லை. எதற்கும் ஆரம்பம், முடிவு என்று காலம் அமையும். தமிழ் இனத்துக்கான உன் போரட்டம் ஆரம்பித்து வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சிலநாட்களில் தமிழ் இனத்துக்கான உன் போரட்டத்தின் முடிவும் தமிழகத்திற்கு சாதகமாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார். இதுதவிர நடிகை கஸ்தூரி உள்ளிட்ட பலரும் சீமானுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.