காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினாவில் பலத்தப் பாதுகாப்பு
நாளை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை மெரினாவில் பலத்தப் பாதுகாப்புகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நிலையில் நாளை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. காணும் பொங்கல் அன்று பொது மக்கள் சுற்றுலாத் தளங்கள், கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு குடும்பம் குடும்பமாக செல்வது வழக்கம். காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெரினாவில் ஏராளமான பொதுமக்கள் கூடுவார்கள். அவர்களுக்குத் தக்க பாதுகாப்பு கொடுக்கக் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மெரினாவில் 6 இடங்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 6 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, அவசர தேவைக்காக 2 ஆம்புலன்ஸ் மெரினாவில் நிறுத்தி வைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் கடலில் இறங்குவதை தடுக்கும் பொருட்டு தடுப்பும் அமைக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு 150 நீச்சல் வீரர்கள் காவல்துறை அதிகாரிகளுடன் பணியில் ஈடுபட உள்ளனர். குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்கவும், அவர்களை மீட்கவும், உதவி மையங்கள் மூலம் குழந்தைகள் கையில் ரிஸ்ட் பேண்ட் கட்டப்பட உள்ளது. இதுமட்டுமல்லாமல் நாளை மட்டும் 2,000 போலீசார் சென்னை மெரினாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.