
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் பொருள்கள் வாங்க மக்கள் குவிந்து வருவதால் சென்னை தி.நகர் காவல்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு ஏற்கெனவே ஆயிரத்து 200 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை ஆயிரத்து 300-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
FACE TAGER CAMERA, BODY WORN CAMERA மற்றும் DRONE CAMERA மூலம் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேமராக்களுடன் TANGO EYE என்ற மென்பொருள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் பழைய குற்றவாளிகளின் புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அந்த நபர்கள் கேமராவில் தென்பட்டால் காவல்துறைக்கு உடனே தகவல் கிடைத்துவிடும். இது தவிர 3 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் 500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தி.நகரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்ட சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 100 கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.