கன்னியாகுமரி அருகே வீடுகளுக்குள் புகுந்தது கடல் நீர்..!
வங்கக் கடலில் குறைந்தழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சில இடங்களில் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பின்னர் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மீனவர்கள் நாளை முதல் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குபகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை கிராமங்களான நீரோடி , சின்னதுறை, வள்ளவிளை அழிக்கல் போன்ற பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. அத்துடன் மார்த்தாண்டம், கடியபட்டினம் போன்ற பகுதிகளில் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.