கடல் சீற்றம்: நாகையில் மீன்பிடித் தொழில் முடக்கம்
நாகை மாவட்டத்தில் கடந்த 7 நாட்களாக மீன்பிடித் தொழில் முடங்கியுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்பகுதிகளில் கடந்த 7 நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. எனவே, ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. அதேபோல், சீர்காழியை அடுத்த பழையாறு, தொடுவாய், பூம்புகார், கூழையார் உள்ளிட்ட 26 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. அதனால் ஏராளமான விசை மற்றும் பைபர் படகுகள் அந்தந்தக் கடற்கரைப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீன்பிடித் தொழில் முடங்கியுள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.