மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் பணியாற்றிய பிரபல விஞ்ஞானி... காலமானார் நெல்லை முத்து!
மே 10ம் தேதி, 1951ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர் நெல்லை முத்து. இவர் வேதியியல் துறையில் இளநிலை பட்டப்படிப்பு பயின்ற நிலையில், இந்தியாவின் விண்வெளித்துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இந்தநிலையில், ஸ்ரீ ஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் முதல்நிலை விஞ்ஞானியாக சேவையாற்றியுள்ளார்.
1963 முதல் 1980 வரை மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் 40 ஆண்டுகள் இணைந்து பணியாற்றியுள்ளார். டாக்டர் கலாம் இஸ்ரோவில் திட்ட இயக்குநராக இருந்தபோது, முத்து 1973 இல் ஒரு விஞ்ஞானியாக பணி புரிந்தார். டாக்டர் கலாம் டி.ஆர்.டி.ஓ.வுக்கு மாறிய பிறகும் அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்தனர். முத்து கலாம் குறித்து நான்கு புத்தகங்களை எழுதியும், மொழிபெயர்த்தும் உள்ளார்.
அறிவியல், சிறுவர் இலக்கியம், கவிதை, வரலாறு, மொழிபெயர்ப்பு, திறனாய்வு எனும் தலைப்புகளில் 70க்கும் அதிகமான நூல்களையும் எழுதியுள்ளார். இவரது 4 நூல்களுக்கு தமிழ்நாடு அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசியாவின் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையால் வழங்கப்பட்ட கவிமாமணி விருது பெற்றுள்ளார்.
இந்நிலையில் இன்று (ஜூன் 16) விஞ்ஞானி நெல்லை முத்து திருவனந்தபுரத்தில் திடீர் உடல் நலக் குறைவால் காலமானார். திருவனந்தபுரத்தில் இருந்து, மதுரையில் உள்ள அவரது மகள் டாக்டர் கலைவாணி இல்லத்துக்கு நெல்லை முத்து உடல் கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்குகள் மதுரையில் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், மூத்த விஞ்ஞானிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.