திருவள்ளூர்: கல்லூரி மாணவன் கொலை; 10-ம் வகுப்பு மாணவிகள் இருவரிடம் விசாரணை
திருவள்ளூரில் கல்லூரி மாணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்து புதைத்ததாக சென்னையை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவிகள் இருவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஒபலாபுரம் ஈச்சங்காடு மேடு கிராமத்தில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்து. உடனே சம்பவ இடத்திற்கு சென்ற ஆரம்பாக்கம் காவல் துறையினர், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மகேஷ் முன்னிலையில் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரு சக்கர வாகனங்களில் 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் செல்வது பதிவாகி இருந்தது தெரியவந்தது. அந்த இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து சோழவாரம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த அசோக் என்பவரை பிடித்து விசாரித்தபோது, வண்டலூர் அடுத்த ஓட்டேரியை சேர்ந்த 10-ஆம் வகுப்பு படித்து வரும் 15 வயதுடைய 2 பள்ளி மாணவிகள், இன்ஸ்டாகிராம் மூலம் தனக்கு நண்பர்களானதாக தெரிவித்துள்ளார்.
அவர்கள் இருவரையும், செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்ற தனியார் கல்லூரி மாணவர், ஆபாசமாக படம் எடுத்து இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி அடிக்கடி பணம் பறித்து வந்ததாகவும், இவரின் தொல்லையை பொறுத்துக் கொள்ள முடியாத மாணவிகள் இருவரும் நடந்தவற்றை தன்னிடம் கூறி கதறியதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து, தான் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படி பிரேம் குமாரை கைப்பேசி மூலம் பணம் தருவதாக மாணவிகள் செங்குன்றம் வரும்படி அழைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தன் நண்பருடன் சேர்ந்து பிரேம்குமாரை தாக்கி பட்டாக்கத்தியால் வெட்டி கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து கொலை தொடர்பாக மாணவிகள் இருவர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த ஆரம்பாக்கம் காவல் துறையினர், இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.