இரக்கமின்றி பிரம்பால் அடித்த ஆசிரியர் : 4-ஆம் வகுப்பு மாணவர் மருத்துவமனையில் அனுமதி
சத்தியமங்கலம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் வகுப்பு ஆசிரியரால் பிரம்பால் அடிக்கப்பட்ட 4-ஆம் வகுப்பு மாணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சுந்தரபுரத்தைச் சேர்ந்த சின்னச்சாமி - ககன்யா தம்பதியின் மகன் மதியரசு (9). இவர் தங்கள் கிராமத்தில் உள்ள பனையம்பள்ளி ஊராட்சி ஒன்றய துவக்கப்பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். மதியரசு நேற்று வகுப்பறையில் சக மாணவர்களுடன் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது வகுப்பாசிரியர் ஆறுச்சாமி மாணவரை சிறுவன் என்றும் பாராமல் பிரம்பால் அடித்ததாக தெரிகிறது.
இதனால் காலில் காயத்துடன் வீட்டுக்கு சென்றுள்ள மதியரசு நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்து மதியரசின் தந்தை சின்னச்சாமி புன்செய் புளியம்பட்டி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். பின்னர் மாணவர் மதியரசு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக பவானிசாகர் வட்டார கல்வி அலுவலரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, தலைமையாசிரிடம் அறிக்கை கேட்டுள்ளதாக கூறினார். மேலும் அறிக்கை பெற்ற பின்னர் நடவடிக்கை எடுப்பது குறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.