பாலக்கோடு: கழிவறை சுத்தம் செய்ய ஆபத்தான முறையில் நீரெடுத்து செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்!

பாலக்கோடு: கழிவறை சுத்தம் செய்ய ஆபத்தான முறையில் நீரெடுத்து செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்!
பாலக்கோடு: கழிவறை சுத்தம் செய்ய ஆபத்தான முறையில் நீரெடுத்து செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்!

பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி அரசு பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய, கிராமத்தில் உள்ள தொட்டியில் ஆபத்தான முறையில் தண்ணீர் எடுத்து செல்லும் மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி அடுத்த கும்மனூர் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமையாசிரியர் உட்பட 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் 1 முதல் 8 வரை 81 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் தூய்மைப் பணியாளர்கள் இல்லை. இதனால், பள்ளி மாணவர்கள் குடத்தை எடுத்து சென்று கிராமத்தில் தரைக்குள் உள்ள ஒரு தண்ணீர் தொட்டியில் ஆபத்தை உணராமல் குனிந்து, தண்ணீர் எடுத்து செல்கின்றனர். எடுத்துச் செல்லும் இவர்களே ஆசிரியர்களின் கழிவறையை சுத்தம் செய்ய தண்ணீர் நிரப்பி வருகின்றனர். இதில் தண்ணீர் தொட்டியில் சிறிது தவறினாலும் கூட, தொட்டிக்குள் விழுந்து அசம்பாவிதங்கள் ஏற்படும் நிலையுள்ளது. இவ்வாறு மாணவர்கள் கழிவறைக்கு தண்ணீர் எடுத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டத்தில் மாணவர்களை வைத்து கழிவறையை சுத்து செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பள்ளியை சுத்தம் செய்தல், கழிவறை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய வைக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து இது போன்று பள்ளிகளில் மாணவர்களை வேலை வாங்கும் செயல் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தியிடம் கேட்டபோது, “கும்மனூர் அரசு பள்ளியில் கழிவறைக்கு மாணவர்கள் தண்ணீர் எடுத்து செல்லும் காட்சிகளை பார்த்தேன். தருமபுரி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கு தூய்மை பணியாளர்களை வைத்து, பள்ளியின் பணிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பள்ளியில் தூய்மை பணியாளர் இருக்காரா என்பது பற்றி விசாரணை செய்யப்படும். மேலும் மாணவர்கள் கழிவறைக்கு தண்ணீர் எடுத்து செல்வது குறித்து, பாலக்கோடு மாவட்ட கல்வி அலுவலரை நேரில் சென்று ஆய்வு செய்து, விசாரணை நடத்தி அறிக்கை கொடுக்க உத்தரவிட்டுள்ளேன். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com