கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு - நண்பருடன் குளிக்க சென்றபோது விபரீதம்
ஒமலூர் அருகே நண்பருடன் குளிக்க சென்ற மாணவர் கிணற்றில் முழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஒமலூரை அடுத்துள்ள காருவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மகன் நந்தக்குமார் கஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நந்தக்குமார் வீட்டில் நடைபெற்ற சுபநிகழ்ச்சிக்காக அவரது நண்பர் சௌந்தரராஜன் வந்துள்ளார். அங்கு இவரும் சேர்ந்து அருகில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால் சௌந்தரராஜனுக்கு நீச்சல் தெரியாத நிலையில் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். இதனைக் கண்ட அவரது நண்பர் நந்தக்குமார் சத்தம்போட்டு கத்தியுள்ளார். இதையடுத்து ஓடிவந்த உறவினர்கள் கிணற்றில் குதித்து மாணவனை தேடினர். ஆனால் சௌந்தரராஜன் கிடைக்கவில்லை. இதையடுத்து ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் வந்து கிணற்றில் இறங்கினர். தொடர்ந்து வீரர்கள் சௌந்தரராஜனின் உடலை மீட்க முயற்சிகள் செய்து வருகின்றனர்.
இதேபோல் திருச்சி மாவட்டம் துறையூரில் நண்பனின் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற மாமல்லபுரத்தை சேர்ந்த சண்முகம் என்பவர் தெப்பகுளத்தில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.