அரசு எச்சரிக்கையையும் மீறி சிறப்பு வகுப்பு: பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு
கிருஷ்ணகிரி அருகே 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் சிறப்பு வகுப்புக்கு சென்றபோது கார் மோதி உயிரிழந்தார்.
அவதானப்பட்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேலின் மகன் பிரவீன், தருமபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை சிறப்பு வகுப்புக்கு செல்ல, பள்ளி பேருந்தை பிடிக்க உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார் பிரவீன். அப்போது காவேரிப்பட்டணம் கூட்டுரோட்டில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் மாணவன் பிரவீன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். வாகனத்தை ஓட்டி சென்ற சத்யா என்பவர் தலையில் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ள நிலையில் மாணவர் சிறப்பு வகுப்புக்கு சென்ற போது விபத்து நேர்ந்துள்ளது. இதுதொடர்பாக புதியதலைமுறைக்கு பதில் அளித்த தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும் என்றும், சிறப்பு வகுப்புகள் நடப்பது தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

