திடீரென பள்ளியிலேயே மயங்கிவிழுந்து உயிரிழந்த மாணவி - என்ன காரணம்?

திருவண்ணாமலையில் அரசுப் பள்ளி மாணவி ஒருவர் பள்ளியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை அடுத்த ராந்தம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் ரேணுகா தம்பதியினர் ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகின்றனர். கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்துவிட்ட நிலையில், பெரிய மகள் கோடீஸ்வரி மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பும், தங்கை அஞ்சலை 10ஆம் வகுப்பும் படித்துவந்துள்ளனர்.

அரசு மேல்நிலைப்பள்ளி, மங்கலம்
அரசு மேல்நிலைப்பள்ளி, மங்கலம்

இந்நிலையில் நேற்று மாலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி அஞ்சலை பள்ளியில் மாதாந்திர தேர்வு எழுதியுள்ளார். அப்போது தேர்வு எழுதிகொண்டிருக்கும்போதே மாணவி அஞ்சலை மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்ற நிலையில், மாணவி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாணவிக்கு ஏற்கெனவே இதய கோளாறு இருப்பதாக கூறப்படும் நிலையில், அதற்காக அவர் சென்னையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிகிறது.

இதைத்தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் உறவினர்கள் மங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மங்கலம் காவல்துறை
மங்கலம் காவல்துறை

அப்போது முற்றுகையிட்ட உறவினர்களிடம் நாளை காலை மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்து விடும் என்றும், அதில் என்ன காரணத்திற்காக மாணவி மரணம் அடைந்தார் என்ற விவரத்தை வைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறையினர் உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து மங்கலம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com