பென்னாகரம் அருகே அரசு பள்ளி தலைமையாசிரியர் மாணவிகளிடம் தகாத முறையில் நடப்பதாக கூறி, பெற்றோர்கள், பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் அருகே உள்ள பத்திர அள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது பூச்சூர் கிராமம். இங்கு செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் 140 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு ஒரு தலைமை ஆசிரியர் உட்பட 7 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தலைமையாசிரியர் சுப்பிரமணி (53) பத்தாம் வகுப்பு மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும், தங்களின் மேல் கை வைத்து பேசுவதாகவும், பெற்றோரிடம் புகார் கூறியதாக தெரிகிறது. மேலும் பள்ளியில் நடப்பதை வெளியே சொன்னால், டிசியை கொடுத்துவிடுவேன் என மிரட்டியதாக மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பெற்றோர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் தலைமையாசிரியரை எச்சரித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், கடந்த வாரம் மீண்டும் தகாத முறையில் நடக்க தலைமையாசிரியர் முயற்சித்ததாக மாணவிகள் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இன்று மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதையடுத்து பென்னாகரம் வட்டாட்சியர் சதாசிவம், ஏரியூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆசிரியரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும், அவரை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தலைமையாசிரியர் சுப்பிரமணியை ஏரியூர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று, காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மாணவிகள் மற்றும் பெற்றோரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் தலைமையாசிரியை போலீசார் கைது செய்தனர்.