தந்தையின் கண்முன்னே பள்ளி வாகனம் ஏறி சிறுமி பலி
ஆம்பூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி முதல் 8 ஆம் வகுப்பு வரை சுமார் 3௦௦-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று பள்ளி முடிந்தவுடன் காளிங்காபுரம் பகுதியில் பள்ளி வேன் குழந்தைகளை இறக்கி விட்டுக்கொண்டிருந்தது. அப்போது, அதே பகுதியை சேர்ந்த கணபதி—ஈஸ்வரி தம்பதியினரின் மூன்றரை வயது குழந்தை ராகநிஷாவை இறக்கிவிட்ட அவரது தந்தை, உறவினர் ஒருவரின் குழந்தையை இறக்கிகொண்டிருந்தார். அப்போது வேனுக்கு முன்னால் குழந்தை ராகநிஷா ஓடியுள்ளது. அந்த நேரத்தில் கவனிக்காமல் அஜாக்கிரதையாக ஓட்டுநர் சூர்யா வேனை இயக்கியதால் வேனின் முன் சக்கரத்தில் சிக்கி சிறுமி ராகநிஷா உயிருக்கு போராடினார். ஒட்டுனர் மற்றும் குழந்தையின் தந்தை கணபதி குழந்தையை அதே பள்ளி வாகனத்தில் ஆம்பூர் அரசு மருத்துவமணைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். மருத்துவர் குழந்தையை பரிசோதனை செய்தபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனால் தகவல் அறிந்த வேன் ஒட்டுனர் சூர்யா அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆம்பூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி அதே பள்ளியில் படிக்கும் சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.