பேருந்து படிக்கட்டில் இருந்து பொத்தென்று கீழே விழுந்த மாணவன் - பதைபதைக்க வைக்கும் வீடியோ
அரசு பேருந்தில் படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவன் எதிர்பாராத விதமாக கீழே விழுந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் இருந்து அச்சரப்பாக்கம் வரை செல்லும் தடம் எண் 19 பேருந்து இன்று காலை வழக்கம்போல சென்று கொண்டிருந்தது. அப்போது மேல்மருவத்தூர் அருகே செல்லும்போது படிக்கெட்டில் தொங்கியபடி மாணவர்கள் சென்றனர். அதில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தனியார் பள்ளியைச் சேர்ந்த நிவேதன் என்கிற மாணவன் கூட்ட நெரிசலில் நிலை தடுமாறி கீழே விழுந்தான். இதை பின்னால் வந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்ததால் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் அனைவராலும் பகிரப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பின்பு இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், காலை மற்றும் மாலை வேளையில் தடம் எண் 19 கொண்ட அரசு பேருந்து ஒன்று மட்டுமே வருவதாகவும், பேருந்தில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இங்கிருந்து செல்லவேண்டிய அவல நிலை உள்ளதாகவும், கூடுதல் பேருந்து இல்லாததே இதற்கு காரணம் எனவும், உடனடியாக துறைரீதியாக நடவடிக்கை எடுத்து கூடுதல் பேருந்துகளை இயக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் படியில் இருந்து விழுந்த மாணவன் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அந்த மாணவனை அங்கிருந்து ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டு மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் தற்பொழுது அந்த வீடியோ சமூக வளையத்தில் வைரலாகி வருகிறது.