100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.4,204 கோடி மோசடி? ஆர்டிஐ-யில் கிடைத்த அதிர்ச்சி தகவல்..!

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.4,204 கோடி மோசடி? ஆர்டிஐ-யில் கிடைத்த அதிர்ச்சி தகவல்..!

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.4,204 கோடி மோசடி? ஆர்டிஐ-யில் கிடைத்த அதிர்ச்சி தகவல்..!
Published on

தமிழகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2020 வரை தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 4 ஆயிரத்து 204 கோடி ரூபாய் நிதி மோசடி நடந்திருப்பதாக சமூக தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை‌ச் சட்டத்தின் மூலம் இத்தகவல் பெறப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 2006-ஆம் ஆண்டு மத்திய அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை கொண்டு வந்தது. நீர் ஆதாரங்களை பாதுகாப்பது, மரக்கன்றுகள் நடுவது உள்ளிட்ட பணிகள் இதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. ஊரகப் பகுதி‌யில், வயது வந்தோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 நாட்களுக்கு குறையாமல் வேலை வாய்ப்பினை அளிக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க ஊராட்சிகள் தோறும் சமூக தணிக்கைக்குழு அமைக்கப்பட்டது.

அதாவது அரசும் மக்களும் இணைந்து வளர்ச்சி திட்டங்களுக்காக வழங்கும் நிதி முறையாக உரியவர்களுக்குச் சென்றடைகிறதா என்பதை சரிபார்த்து மக்களிடமே அறிக்கை சமர்ப்பிப்பது தான் சமூக தணிக்கை. அந்த வகையில் அந்தந்த கிராம மக்களே தணிக்கை செய்யும் வகையில் 2011-இல் குழுக்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் 6 மாதங்களுக்கு ஒரு முறை சமூக தணிக்கை செய்யப்பட்டு அதற்காக சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் எத்தனை பேர் பணியாற்றினர்? அவர்களுக்கு உரிய கூலி வழங்கப்படுகிறதா? இத்திட்டத்தில் முறைகேடு ஏதேனும் நடக்கிறதா என்பதை இக்குழு ஆய்வு செய்து, தவறுகள் இருக்கும்பட்சத்தில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களுக்கு புகார் அளிக்கும். அவ்வாறு நடத்தப்பட்ட தணிக்கையில் 2017-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரத்து 204 கோடி ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

நாமக்கல்லை‌ச் சேர்ந்த விஸ்வராஜ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இத்தகவலை பெற்றுள்ளார். இவர் பெற்ற தகவல்படி அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 347 கோடி ரூபாய், திருவள்ளூரில் 307 கோடி ரூபாய் மற்றும் கிருஷ்ணகிரியில் 293 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. பொதுவாக ஒரே குடும்பத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வேலை அட்டைகளை வழங்கி நிதியாண்டில் 100 நாட்களை விட கூடுதலாக பணி செய்ய அனுமதித்தல், இறந்த நபர்கள் பணி புரிந்ததாக பதிவு செய்து ஊதியம் வழங்குதல், ஊராட்சியில் வசிக்காத நபர்களுக்கு ஊதியம் வழங்குதல், தவறான வங்கி கணக்கில் ஊ‌தியத்தை வரவு வைத்தல், வேலை செய்யாத நபர்களின் பெயர்களை போலியாக பதிவு செய்து ஊதியம் வழங்குதல், குளம், ஏரிகளில் பணி நடைபெற்றதாக பதிவு செய்து செலவினம் மேற்கொள்வது, இயந்திரங்களை கொண்டு வேலை செய்து விட்டு மனிதர்கள் செய்ததாக கூறி கணக்கு காட்டுவது, இல்லாத நிறுவனங்களின் பெயரில் பொருட்களை வாங்கியதாக போலி ரசீது தயாரித்தல் உள்ளிட்ட வழிகளில் இந்த முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சிகளிடம் சமூக தணிக்கை குழு புகார் அளித்தும் அந்த தொகையை வசூலிக்கவோ, அவர்கள் மீது வழக்குப்பதிவோ செய்யவில்லை என்பதும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. இத்தகவலை பெற்றுள்ள நாமக்கல்லை சேர்ந்த விஸ்வராஜ், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இந்த புகார் தொடர்‌பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெஜராஜிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது புகார் தொடர்பாக முழுமையாக விசாரிக்கப்பட்டு தவறுகள் நடைபெற்றிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகள் இல்லை. தற்போதுதான் தேர்தல் முடிந்து உறுப்பினர்கள் பொறுப்பேற்றுள்ளனர். இந்த சூழலில் நிதி மோசடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com