இப்படியெல்லாம் நடக்கிறதா?? உஷார்!! சமூக வலைதளங்களில் பெண்களின் செல்போன் எண்களை விற்று நூதன மோசடி!

சமூக வலைதளங்களில் பெண்களின் செல்போன் எண்களை விற்பனை செய்யும் கும்பல். பெண்களின் வயதிற்கேற்ப செல்போன் எண்கள் ரூ.200 முதல் 500 வரை விற்பனை. ஐசபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை
cyber crime
cyber crimept desk

செய்தியாளர்: J.அன்பரசன்

அதிகரிக்கும் சைபர் க்ரைம் குற்றங்கள்

சைபர் க்ரைம் என்பது, பல்வேறு விதமாக வெவ்வேறு நூதன முறையில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. லிங்க்குகளை அனுப்பி பொதுமக்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை கொள்ளையடிப்பது, மோசடிகளில் சிக்க வைத்து... பணத்தை பறிப்பது போன்ற சைபர் க்ரைம் நிகழ்ந்து வரும் நிலையில், பெண்களை வைத்து பல்வேறு சைபர் க்ரைம்கள் நடைபெற்று வருகின்றன.

ஆபாசமாக பெண்களை சித்தரித்து பணம் பறிப்பது மற்றும் பெண்களின் புகைப்படங்கள் ஆபாச வீடியோக்கள் ஆகியவற்றை விற்பனை செய்வது போன்ற வகையிலும் மோசடிகள் நடைபெற்று வருகின்றன.

Online fraud
Online fraudfile

அந்த வகையில் தற்போது பெண்களை பாதிக்கும் வகையில் நூதன முறை சைபர் க்ரைம் ஒன்று அரங்கேறியுள்ளது. சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களின் செல்போன் எண்கள் விற்பனை செய்யப்பட்டு மோசடி நடைபெறுவதாக சென்னை சைபர் க்ரைம் காவல் துறையினருக்கு புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சமூக வலைதளங்களில் ஆபாசமாக புகைப்படங்கள், வீடியோக்கள், லைவ் வீடியோக்கள் ஆகியவற்றை பார்ப்பதற்கு பல்வேறு பக்கங்கள் சட்டவிரோதமாக செயல்படுகிறது. அது மட்டுமல்லாது இதற்கென்று தனியாக டெலிகிராம் குரூப்புகளும் செயல்பட்டு வருகின்றன. இதுபோன்று சமூக வலைதள பக்கங்களில் உள்ளே நுழைந்தாலே உடனடியாக தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தி அனுப்பி கும்பல் ஒன்று தொடர்பு கொண்டு பேசுகிறார்கள்.

சமூக வலைதளங்கள் மூலம் ஆண்களிடம் நூதன மோசடி

பெண்களுடன் பேச வேண்டுமா? பெண்களின் செல்போன் எண்கள் விற்பனைக்கு உள்ளது என குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். பெண்களின் வயது வாரியாக பல பெண்களின் செல்போன் எண்கள் இருப்பதாகவும் G Pay மூலம் பணம் செலுத்தினால் செல்போன் எண்கள் அனுப்பப்படும் எனக் கூறி பெண்களின் செல்போன் எண்கள் விற்பனை செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை செல்போன் எண்கள் விற்கப்படுவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. வயதிற்கு ஏற்றார்போல் புகைப்படங்களுடன் பெண்களின் எண்கள் விலை வைத்து விற்கப்படுவது தெரிய வந்துள்ளது. குறிப்பாக பெண்கள் பேச ஆசைப்படுகிறார்கள் எனக் கூறி வலையை விரித்து பல ஆண்களிடம் செல்போன் எண்கள் விற்கப்படுவதும் தெரியவந்துள்ளது.

cell phone number
cell phone numberfile

அவ்வாறு பெண்களின் செல்போன் நம்பரை ஒருவர் வாங்கும்போது, அவரோடு பேசும் வகையில் பல்வேறு குறுஞ்செய்திகள் விலை கொடுத்து வாங்கிய செல்போன் நம்பரில் இருந்து வரும் வகையில் ஆண்களை அந்த மோசடி கும்பல் ஏமாற்றுகிறது.

சிலர் அந்த எண்களுக்கு வீடியோ கால் மூலமாகவும், ஆடியோ கால் மூலமாகவும் பேச முற்படும்போது பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் எண்களை விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக விற்பனை செய்யப்பட்ட செல்போன் எண்களில் உள்ள பெண்கள் பேசாவிட்டால் மீண்டும் எங்களை தொடர்பு கொள்ளுமாறும் வேறு எண்கள் தருவதாகவும் இல்லையெனில் சம்பந்தப்பட்ட பெண்களை பேச வைப்பதாகவும் தரகர் வேலை பார்ப்பதும் தெரிய வந்துள்ளது.

பெண்களே உஷார்..., செல்போன் எண்களை பாதுகாப்பாக பயன்படுத்தவும்...

அவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் எண்கள் விற்பனை செய்யப்பட்ட பிறகு சில மணி நேரம் பேசப்படுவதாகவும் அதன் பின்பு சுவிட்ச் ஆஃப் ஆகி விடுவதாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீண்டும் சமூக வலைதளத்தின் மூலம் பெண்களின் எண்களை வாங்குவதற்கு ஆண்கள் தேடி வரும் வகையில் இந்த மோசடி கும்பல் செயல்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்த வகை மோசடியில் சுய தொழில் செய்து கடைகள் அமைத்து தொழில் மேற்கொள்ளும் பெண்கள் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக டெய்லர் கடை, ஸ்பா பியூட்டி பார்லர், என பெண்கள் மட்டுமே கடைகள் மற்றும் அலுவலகம் வைத்து நடத்தும் தொழிலில், விளம்பரத்திற்காக கடை போர்டுகளில் உள்ள செல்போன் எண்களையும் இந்த கும்பல் திருடி ஆன்லைனில் விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.

அவ்வாறு தொழில் மேற்கொள்ளும் பெண்களின் செல்போன் எண்களில் நட்பாக பேசி உல்லாசமாக பேசும் பெண்களை ஆசை வலையில் விழ வைத்து ,அவர்கள் எண்களையும் விற்பனை செய்கின்றனர். இந்த விவகாரத்தில் சில அப்பாவி பெண்கள் மாட்டிக்கொண்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். இவ்வாறாக பெண்களின் செல்போன் எண்களை விற்பனை செய்யும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டெலிகிராம் போன்ற சமூக வலைதள பக்கங்களை பட்டியலெடுத்து விற்பனை செய்யும் கும்பல்களை சைபர் க்ரைம் போலிசார் தேடி வருகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சமூக வலைதள பக்கங்களுக்கு சைபர் க்ரைம் போலீசார் கடிதம் எழுதி தகவல்களை கேட்டுள்ளனர்.

எனவே ஆண்கள் இதுபோன்று பெண்களின் செல்போன் எண்களை வாங்கி ஏமாற வேண்டாம் எனவும், தொழில் மேற்கொள்ளும் பெண்கள் அதற்காக பயன்படுத்தப்படும் செல்போன் எண்களில் இது போன்று மோசடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பு கொண்டால் உடனடியாக புகார் அளிக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com