உள்ளாட்சி தேர்தல் வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதனிடையே, விதிமுறைகளை பின்பற்றியே தேர்தல் நடத்தப்படுவதால், திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை எனக் கூறி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும், கடந்த 7ஆம் தேதி வெளியிடப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் நிலையில், விதிமுறைகளை பின்பற்றியே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதாகவும், திமுக தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதேபோல மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மறைமுகத் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கரூரைச் சேர்ந்த வாக்காளர் முருகேசன் என்பவரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.