“நாங்கள் நிவாரணம் கொடுக்கிறோம்.. சவுக்கு சங்கர் சிறையில் இருந்து வெளிவருகிறார்.. பிறகு நீங்கள் அவரை வேறு ஒரு வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்து மீண்டும் சிறையில் அடைக்கிறீர்கள். ஏன் நீங்கள் இதுபோன்று நடந்து கொள்கிறீர்கள்?” என தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 16 வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று சவுக்கு சங்கர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து கடந்த 14ம் தேதி உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்திருந்தது.
ஏனெனில் இந்த உத்தரவுக்கு ஒரு நாள் முன்புதான் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்திருந்த புகாரில் இரண்டாவதாக குண்டர் சட்டம் போடப்பட்டது. இது தொடர்பான விசாரணையின்போதுதான், வழக்குகள் தொடர்பான பட்டியலைத் தமிழக அரசு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் தன் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், சவுக்கு சங்கர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வேறு ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. அதோடு இணைத்து இந்த வழக்கையும் விசாரிக்க வேண்டும் என வாதிட்டார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், மாநிலம் முழுவதும் 72க்கும் அதிகமாக சவுக்கு சங்கருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் சங்கர் மீதான குண்டாஸ் வழக்கையும், இந்த வழக்கையும் ஒன்றாக ஒப்பிட்டு பார்க்க கூடாது. தனித்தனியாகத்தான் வழக்கை பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், “நாங்கள் நிவாரணம் கொடுக்கிறோம்.. சவுக்கு சங்கர் சிறையில் இருந்து வெளி வருகிறார்.. பிறகு மீண்டும் நீங்கள் அவரை வேறு ஒரு வழக்கில் கைது செய்து மீண்டும் சிறையில் அடைக்கிறீர்கள். ஏன் நீங்கள் இதுபோன்று நடந்து கொள்கிறீர்கள்?” என தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம் என்றும் அன்றைய தினம் இந்த வழக்குகளை ஒன்றாக விசாரிப்பதா அல்லது தனித்தனியாக விசாரிப்பதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.