டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனம் செல்லாது: உச்சநீதிமன்றம்
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சியின் உறுப்பினர்களாக 11 பேரை நியமித்து தமிழக அரசு கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 31-ல் உத்தரவிட்டது. இந்த நியமன நடவடிக்கை சட்டவிதிகளின்படியும், உச்சநீதிமன்றம் வகுத்துள்ள விதிமுறைகளின்படியும் நடைபெறவில்லை என்றும் கூறி திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்று கூறி தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பினை எதிர்த்து தமிழக அரசு மற்றும் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட 11 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. டிஎன்பிஎஸ்சி அமைப்புக்கு வழிகாட்டுதல் நெறிமுகளைப் பின்பற்றி வெளிப்படைத் தன்மையுடன் நியமிக்குமாறும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.