எஸ்.பி.ஐ. வங்கியின் 30 லாக்கர்களை உடைத்து 500 சவரன் கொள்ளை
திருப்பூர் அருகே ஸ்டேட் வங்கியில் 500 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் கள்ளிபாளையத்தில் ஸ்டேட் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்களின் நகை மற்றும் பணத்தை வீட்டில் வைத்தால் கொள்ளை போக வாய்ப்புண்டு என்ற அச்சத்தால் இங்கு உள்ள லாக்கர்களில் வைத்திருந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த ஸ்டேட் வங்கியின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் 30 லாக்கர்களை உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அவர்களைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, நகைகள் கொள்ளைபோன சம்பவத்தை கேள்விப்பட்ட வாடிக்கையாளர்கள் வங்கி முன் திரண்டனர். தாங்கள் அடகு வைத்த மற்றும் லாக்கரில் வைத்திருந்த நகைகளின் நிலையை அறிந்துகொள்வதற்காக அவர்கள் வந்தனர். ஆனால் வாடிக்கையாளர்களை வங்கிக்குள் உள்ளே விடாததால், அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.