சத்தியமங்கலம்: வனத்துறை ஊழியரின் சொல்கேட்டு வனத்திற்குள் சென்ற காட்டு யானை
சத்தியமங்கலம் வனத்துறை ஊழியரின் சொல்படி கேட்ட காட்டு யானை சாலையிலிருந்து வனப்பகுதிக்கு சென்றது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசனூர் மலைப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. இந்நிலையில், சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தீவனம் மற்றும் குடிநீர் தேடி சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித் திரிகின்றன.
பகல் நேரங்களில் காட்டு யானைகள் சாலையில் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் சாலையில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் இன்று மதியம் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டுயானை ஆசனூர் அருகே சீவக்காய் பள்ளம் என்ற இடத்தில் சாலையில் முகாமிட்டு அங்கும் இங்கும் நடமாடியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது வனத்துறை ஊழியர் ஒருவர் யானையை சத்தம்போட்டு அதட்டியுள்ளார். வனத்துறை ஊழியரின் சத்தம் கேட்ட காட்டு யானை அவரின் சொல்படி கேட்டு சாலையை விட்டு மெதுவாக சாலையோரம் உள்ள வனப்பகுதிக்குச் சென்றது.
வனத்துறை ஊழியரின் சத்தம்கேட்டு சாலையை விட்டு வனப்பகுதிக்கு சென்ற யானையை கண்டு வாகன ஓட்டிகள் ஆச்சரியமடைந்தனர்.