கரும்பு லாரிகளால் நெடுஞ்சாலையில் சுற்றித் திரியும் யானைகள் - மக்கள் புகார்
கரும்பு லாரிகளின் தவறான நடத்தையால் வனப்பகுதியில் உள்ள யானைகள் நெடுஞ்சாலைக்கு வந்து மக்களை அச்சமூட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்டபல்வேறு வகையான வன விலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிகம் வசிக்கும் இந்த வனப்பகுதி வழியாக சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. யானைகள் அவ்வப்போது இந்தச் சாலையை கடந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் தாளவாடி மலைப்பகுதி மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள் வந்த வண்ணம் உள்ளன. இதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக உயரத்திற்கு கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரிகள் பண்ணாரி சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ள உயர தடுப்புக் கம்பியில் சிக்கிக் கொள்வதால் லாரியின் மேல் உள்ள அதிகப்படியான கரும்பு துண்டுகளை சோதனைச்சாவடி அருகே கீழே போட்டுவிட்டு செல்கின்றனர்.
இதனால் இந்தக் கரும்புகளின் வாசனையை நுகர்ந்த காட்டு யானை ஒன்று அடிக்கடி இரவு நேரத்தில் பண்ணாரி சோதனைச்சாவடியில் முகாமிட்டு கரும்பை தின்பதற்காக வருகிறது. ஒற்றை காட்டு யானை சோதனைச்சாவடி முன்புறம் சாலையோரம் வீசப்பட்ட கரும்புத் துண்டுகளை தும்பிக்கையால் எடுத்தபடி வெகுநேரம் நின்றிருந்தது.
இதனை கண்ட வாகன ஓட்டிகள், வனத்துறையினர் அச்சம் அடைந்தனர். ஆகவே கரும்பு லாரிகளில் அதிகப்படியான பாரம் ஏற்றி வந்து கொட்டி செல்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.