ஆற்றுப் பாலத்தில் இருந்து குதித்த இளைஞர் சடலமாக மீட்பு
சத்தியமங்கலம் பவானி ஆற்றுப் பாலத்திலிருந்து குதித்த இளைஞரின் உடல் இரு தினங்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டது.
சத்தியமங்கலம் நகர்ப்பகுதியின் மத்தியில் பவானி ஆறு ஓடுகிறது. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை 27 வயதுள்ள இளைஞர் ஆற்றில் குதித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் பவானி ஆற்றில் இறங்கி தேடும்பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆற்றில் 3000 கனஅடிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் நீரின் வேகம் காரணமாக கொமராபாளையம் பவானி ஆற்றிலும் தீயணைப்பு வீரர்கள் உரிய பாதுகாப்பு கவசத்துடன் ஆற்றில் விழுந்த இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் இளைஞர் குறித்த எந்த தகவலும் கிடைக்காததால் புதன்கிழமை இரண்டாவது நாளாக தீயணைப்பு வீரர்கள் உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் பரிசலில் தேடினர். அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 2 கிமீ தூரத்தில் உள்ள ஆலத்துக்கோம்பை படித்துறையில் இளைஞர் சடலம் ஒதுங்கியிருந்தது.
போலீசார் விசாரணையில் இறந்தவர் பற்றிய அடையாளம் தெரிந்தது. இரு தினங்களாக காணாமல்போன கோட்டூ வீராம்பாளையத்தைச் சேர்ந்த எம்டெக் பட்டதாரி யாசோதரன் சடலம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து யாசோதரனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவர்கள் தனது மகன் என அடையாளம் காட்டியதையடுத்து யாசோதரனின் உடலை போலீசார் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
செவ்வாய்க்கிழமை தந்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனமுடைந்த யாசோதரன் பவானிஆற்று பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.