சினிமா ஃபைனாசியர் அன்புசெழியன் மீது வழக்குப் பதிவு
இயக்குநர் சசிகுமாரின் உறவினர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் எழுதியதாக ஒரு கடிதம் தற்சமயம் திரைத்துறை வட்டாரங்களில் வலம் வருகிறது.
திரைப்பட இயக்குனரும் நடிகருமான சசிக்குமாரின் உறவினர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தக் கொலை கந்துவட்டி தொல்லையால் நடந்ததா என போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான சசிக்குமார், படத்தயாரிப்பாளராகவும் உள்ளார். இவரது உறவினர் அசோக் குமார், சசிக்குமாரின் தயாரிப்பு நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராக பணிபுரிந்ததாக கூறப்படுகிறது. இவர் சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வந்தார். இவரது மனைவி, மகள், மகன் மதுரையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வளசரவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சசிக்குமாரும் நேரில் வந்தார். இதையடுத்து போலீசார் வீட்டில் சோதனையிட்டபோது அசோக்குமார் எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில், “பல ஆண்டு கம்பெனி புரோடக்சன்ஸ் சார்பில் படங்களை தயாரித்து வருகிறோம். எல்லா படங்களையும் சரியான நேரத்தில் வெளியிட்டுள்ளோம். ஆனால் பைனான்சியரும் தயாரிப்பாளருமான அன்பு செழியனிடம் கடன் வாங்கியது பெரிய தவறு. 7 ஆண்டுகளாக வட்டிக்குமேல் வட்டி வாங்கிய அவர், கடந்த 6 மாதமாக கீழ் தரமாக அவமானப்படுத்தியுள்ளார். வேறு ஆட்களை வைத்து வீட்டிலுள்ளவர்களை தாக்குவேன் என்று மிரட்டினார். நாங்கள் யாரிடம் உதவி கேட்பது என்பது தெரியவில்லை. அதிகாரம், அரசாங்கத்தின் பெரிய புள்ளிகள், சினிமா பெடரேசன் என சகலமும் அன்புசெழியன் கையில் இருக்கிறது. அதனால் அவரை ஒன்றும் செய்யமுடியாது.
எனது உயிருனும் மேலான சசிக்குமாரையும் சித்ரவதை செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து உன்னை மீட்பதற்கு சக்தி இல்லாததால் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.
கந்து வட்டி கொடுமை காரணமாக அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளாரா என்பது குறித்து வளசரவாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அன்புசெழியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.