ஸ்டாலினைக் குற்றம்சாட்டும் சசிகலாவின் முதல் அறிக்கை
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் உடனான கூட்டணியில் திமுக இருந்தபோதுதான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதாக சசிகலா தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக மக்களை திசை திரும்பும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபடுவதாகவும், ஜல்லிக்கட்டுக்கான சட்டப்போராட்டங்களைத் தெரிந்துகொண்டு அவர் பேச வேண்டும் எனவும் சசிகலா தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அவசர சட்டம் நிறைவேற்ற வேண்டும் என கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பரில், பிரதமருக்கு அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியதையும் சசிகலா சுட்டிக்காட்டியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, பொது விவகாரம் தொடர்பாக சசிகலா வெளியிட்ட முதல் அறிக்கை இதுவாகும்.