சசிகலா புஷ்பா திருமணம் செய்து கொள்ள உள்ள ராமசாமி என் கணவர் : மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் புகார்
ராமசாமி என்பவரை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்பி சசிகலா புஷ்பா திருமணம் செய்யப்போவதாக கூறப்பட்டு வரும் நிலையில், ராமசாமியின் மனைவி எனக் கூறி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து நடத்தப்பட்ட அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தலில் , அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்பி சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன், பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா புஷ்பா போட்டியிடப் போவதாகக் கூறி மனுத்தாக்கல் செய்ய வந்தார். அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகளுக்கும், சசிகலா புஷ்பாவின் கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சசிகலா புஷ்பாவின் கணவர் கடுமையாக தாக்கப்பட்டார். இதுதொடர்பாக காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்துக்குப் பிறகு அரசியல் மற்றும் பிற விவகாரங்களிலிருந்து ஒதுங்கியே இருந்தார் சசிகலா புஷ்பா. இதற்கிடையே சசிகலா புஷ்பாவிற்கும், அவரது கணவருக்கும் முறைப்படி விவாகரத்து நடைபெற்றது. இந்நிலையில்தான் சசிகலா புஷ்பாவுக்கும், டெல்லியைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியது. இருவரின் பெயர்களும் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்களும் சமூக வலைத்தளங்களில் பரவியது. அந்த அழைப்பிதழின் படி டெல்லியில் வரும் 26ஆம் ராமசாமி என்பவரை சசிகலா புஷ்பா திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் மாப்பிள்ளையான ராமசாமி ஓரியண்டல் தொழில்நுட்ப நிறுவனப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சத்ய பிரியா என்பவர் தனது குழந்தையுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், டெல்லி ராமசாமி தனது கணவர் என்றும் தனக்கும் அவருக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது எனவும் கூறியுள்ளார். மேலும் , ராமசாமி ஒரு நீதிபதி எனக்கூறி என்னை திருமணம் செய்துகொண்டதாகவும், அதற்கான போட்டோ ஆதாரங்கள் தன்னிடம் உள்ளன என்றும் கூறியுள்ளார். ராமசாமி தன்னுடன் ஒரு வருடம்தான் வாழ்ந்தார் என்று கூறியுள்ள சத்யபிரியா, குடும்ப பிரச்னையால் தன்னை தந்தை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய சத்யபிரியா “ இந்நிலையில்தான் சசிகலா புஷ்பா என்பவருடன் எனது கணவர் ராமசாமி திருமணம் செய்துகொள்ளப்போவது குறித்த தகவல்களை கேள்விப்பட்டேன். அந்தத் தகவல் அறிந்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். எனது கணவர் என்னை இன்னும் விவாகரத்து செய்யவில்லை. அவர் என்னுடன் சேர்ந்த வாழ வேண்டும்” என்று ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தார்.