"சிறையில் எனக்கு 5 மாதம் சோப்பு தண்ணீரைதான் கொடுத்தார்கள்; அதையும் குடித்தேன்” - சசிகலா பேச்சு!

“சிறைக்கு எப்படி போனேன் என்று எனக்குத் தெரியும்; எந்த சூழ்நிலையினால், யாரால் என்பதை தற்போது கூற விரும்பவில்லை” என கோபிசெட்டிபாளையத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா தொண்டர்களிடையே தெரிவித்துள்ளார்.
Sasikala
SasikalaPt Desk

தமிழக மக்களின் உரிமைகளை காத்திடவும், திமுக ஆட்சி அவலங்களை மக்களுக்கு எடுத்துரைக்கவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை பேணிக்காத்திடவும் என்ற முழக்கங்களோடு சசிகலா ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

முதல் நாள் பயணமாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகே தொண்டர்களை சந்தித்து பேசினார்.

Senthil Balaji
Senthil Balaji

அப்போது பேசிய அவர், “அமைச்சர் மீது குற்றச்சாட்டு வருகிறது என்றால் அதிகாரிகள் விசாரிக்க தான் செய்வார்கள்; அதிகாரிகளை வீட்டுக்குள் வர வேண்டாம் என அவர்களை அடித்தால். தமிழக மக்களுக்கு திமுகவினர் என்ன சொல்லிக் கொடுக்கிறீர்கள். சாதாரண குடிமகனுக்கு என்ன சட்டமோ அதே தான் அமைச்சர்களுக்கும். திமுகவிற்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் தான் கைது செய்தனர்; அதற்கு அவர் பயப்படவில்லை. என்னையும் தான் கைது செய்து பெங்களூரு சிறைக்கு அனுப்பினார்கள்; அதனால் நான் பயந்துவிட்டேனா?. சிறைக்கு எப்படி போனேன் என்று எனக்கு தெரியும். எந்த சூழ்நிலையினால், யாரால் என்பதை தற்போது கூற விரும்பவில்லை.

சிறைக்குச் செல்லும்போது தமிழகத்தில் ஆட்சி அமைத்து விட்டு தான் சென்றேன். காலையில் பத்தரை மணிக்கு சிறை தண்டனை என்ற செய்தி வந்தது; அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தமிழகத்தில் ஆட்சியை அமைத்துவிட்டு சென்றேன். இதுதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் நான் கற்றுக் கொண்டது. அதனால் நாங்கள் பயப்படவில்லை, நான் அழுது கொண்டு கதவை மூடிக்கொள்ளவில்லை, நாங்கள் வீரமாகத்தான் சென்றோம்.

சசிகலா-ஜெயலலிதா
சசிகலா-ஜெயலலிதா

தமிழகத்தில் பெண்களும் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை எடுத்துக்காட்ட, நானும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் மிகவும் பாடுபட்டோம், அதை செய்தும் காண்பித்தோம். திமுக அமைச்சரை போல் அழுது கொண்டு நெஞ்சை பிடித்துக் கொண்டு நாங்கள் எதுவும் செய்யவில்லை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எங்களை கைது செய்தது இதே திமுக அரசு தானே, தற்போது திமுகவினரை கைது செய்ய வரும் போது உங்களுக்கு ஏன் வலிக்கின்றது. அமைச்சராக இருந்தால் என்ன?; சட்டத்திற்கு முன்னால் அனைவரும் ஒன்றுதான், முன்னாள் முதல்வர் கருணாநிதியை கைது செய்தபோது கத்தி கூச்சலிட்டு அதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தது போல நாங்கள் இல்லை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கைது செய்தபோது காவலர்களுக்கு அமர வைத்து தேநீர் கொடுக்கச் சொன்னார், ‘கைது செய்ய வந்துள்ளோம்’ என காவல்துறையினர் கூறியபோது சரி வருகிறேன் என்று சொன்னவர் ஜெயலலிதா; அதற்கு ஒன்றும் ஜெயலலிதா பயப்படவில்லை. தற்போது திமுக அமைச்சரை கைது செய்தது போலத்தான் அப்போது என்னையும் கைது செய்தனர், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் என்னை கைது செய்தார்கள்; நான் சிறையில் 313 நாள் இருந்துள்ளேன், சிறையில் என்னை அவ்வளவு சித்திரவதை செய்தார்கள்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, தமிழகத்தில் திமுக ஆட்சி கூட்டணியில் இருந்தபோது ஐந்து மாதங்கள் சென்னை சிறையில், அங்குள்ள காவலர்களை வைத்து ஐந்து மாதம் எனக்கு சோப்பு தண்ணீரை கொடுத்தார்கள், அதையும் குடித்துவிட்டு உயிர் வாழ்ந்தேன். காவல்துறையினர் விசாரணைக்கு வர சொன்னால் போக வேண்டும் தானே, அதற்கு எடுத்துக்காட்டாக திமுக இருந்திருக்க வேண்டும், ஒரு அமைச்சரே இவ்வாறு செய்தால் எப்படி?, தற்போது கைது செய்துள்ள அமைச்சரை திமுக கட்டுப்பாட்டில் உள்ள சிறையில் வைத்துள்ளனர்.

என்னை கைது செய்து பெங்களூரு சிறையில் வைத்திருந்தபோது தமிழக அமைச்சரவையில் இருந்து 5 அமைச்சர்கள் என்னை சந்திக்க வந்திருந்தனர், அப்போது என்னை சென்னைக்கு வந்து விடுங்கள் என்று கூறினார்கள், அந்த நேரத்தில் சென்னைகு நான் வந்திருந்தால் ‘சிறையில் பல வசதிகள் செய்து கொடுத்தார்கள், அரசு எனக்கு உதவி செய்கிறது’ என்று கூறுவார்கள்; அந்த கெட்ட பெயர் என்னால் அரசுக்கு வரக்கூடாது; அதனால் நான் பெங்களூரில் இருந்து கொள்கிறேன் என கூறினேன். தற்போது அவ்வாறாக நடக்கின்றது” என்றுப் பேசினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com