சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை, சசிகலா இன்று சந்திக்க உள்ளார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கணவரை காண்பதற்காக சசிகலா 15 நாட்கள் பரோல் கேட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்திருந்தார். பரோலுக்கு அனுமதி கிடைத்ததை அடுத்து சசிகலா நேற்று மாலை பரோலில் வெளியே வந்தார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் விஷ்ணுப்ரியா வீட்டில் சசிகலா தங்கியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை, சசிகலா இன்று சந்திக்க உள்ளார். சசிகலா தங்கியுள்ள வீடு, மருத்துவமனை தவிர வேறு இடங்களுக்குச் செல்லக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டிலோ, மருத்துவமனையிலோ பார்வையாளர்களை சந்திக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசியல், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

