இந்தி எதிர்ப்பு மூலம் அரசியலில் ஆர்வம் காட்டிய நடராஜன்..!

இந்தி எதிர்ப்பு மூலம் அரசியலில் ஆர்வம் காட்டிய நடராஜன்..!
இந்தி எதிர்ப்பு மூலம் அரசியலில் ஆர்வம் காட்டிய நடராஜன்..!

சசிகலாவின் கணவர் ம.நடராஜன் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 76. இந்நிலையில் நடராஜனின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்வோம்.

தஞ்சாவூர் மாவட்டம் விளார் கிராமத்தில் பிறந்தவர் ம.நடராஜன். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் தமிழக அரசியலில் தடம் பதித்த நடராஜன், திராவிட‌ கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுகவில் தன்னை இணைத்து‌க் கொண்டார். ஆரம்ப கால கட்டத்தி‌ல் திமுகவின் மாநில மாணவரணி செயலாளர் பதவி நடராஜனுக்கு வழங்கப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் காமராஜரை விருதுநகர் தொகுதியில் தோற்கடித்த கே.சீனிவாசன், முன்னாள் சபாநாயகர் காளிமுத்து, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் எல்.‌‌கணேசன், கவிஞர் நா.காமராசர் ஆகியோரோடு இணைந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரம் காட்டினார் நடராஜன். மொழிப்பற்று மூலமாக சாதியை ஒழிக்க முடியும் என்பது நடராஜனின் நம்பிக்கையாக இருந்தது. அதனால், தலித் இலக்கியத்தில் தலைசிறந்து விளங்கிய கவிஞர் நா.காமராசருடன் இணைந்து சாதி ஒழிப்பு இலக்கியங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

திமுக ஆட்சி காலத்தில் அக்கட்சியின் தலைவர் கருணாநிதியின் மூலம் அரசு செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார் நடராஜன். 1982ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் அரசு செய்தித் தொடர்பாளராக இருந்தபோது, அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த சந்திரலேகா மூலமாக அதிமுகவில் ‌நடராஜனுக்கு தொடர்பு கிடைக்கிறது. அந்த காலகட்டத்தில் அதிமுகவில் அறிமுகமாகியிருந்த ஜெயலலிதாவுக்கு உதவியாளர் தேவை என்ற தகவல் நடராஜனுக்கு தெரியவந்த நிலையில், அந்த வேலைக்கு மனைவி சசிகலாவை பணியமர்த்தினார். இந்த நிகழ்வின் மூலம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும், நடராஜனின் குடும்பத்திற்கும் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் நீண்ட காலமாக நேரடி அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த நடராஜன், புதிய பார்வை ‌இதழின் ஆசிரியராக பணியாற்றி வந்தார். 

இந்நிலையில் நடராஜன் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து காலை 11 மணியளவில் அவரது சொந்த ஊரான தஞ்சைக்கு உடல் எடுத்துச் செல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com