நாளை தீர்ப்பு

நாளை தீர்ப்பு

நாளை தீர்ப்பு
Published on

சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த 2015 மே 11ம் தேதியன்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோரை விடுவித்து தீர்ப்பு வழங்கியது.இதனை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வ ராய் ஆகியோரைக் கொண்ட அமர்வு இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின் தீர்ப்பை ஒத்தி வைத்தது.இதனிடையே ஜெயலலிதா மறைவு, சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்பு, சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்வு, அதனைத் தொடர்ந்து பன்னீர் செல்வம் முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா என அடுத்தடுத்த நிகழ்வுகள் அரங்கேறின.

அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் பன்னீர் செல்வம் சசிகலாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய நிலையில், சசிகலா முதலமைச்சராகப் பொறுப்பேற்பதில் சிக்கல் ஏற்பட்டது.இது தவிர சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வர இருப்பதால் அவரை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, ஆளுநருக்கு வழங்கிய ஆலோசனையில் சிறப்பு சட்டப் பேரவையைக் கூட்டுமாறும், அது ஒன்றே பெரும்பான்மையை நிரூபிக்க வழி என்றும் கூறியிருந்தார்.

மேலும் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வருவதற்காக ஆளுநர் காத்திருப்பது நல்லதுதான் என்றும் அதே சமயத்தில் நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்வதுநல்லதல்ல என்றும் முகுல் ரோத்தஹி கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதனிடையே சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு குறித்துக் கருத்துத் தெரிவித்திருந்த சசிகலா, தீர்ப்பு வரட்டும் பார்போம் என்று கூறியிருந்தார்.இந்நிலையில் சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com