அன்னிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா மனுவிற்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கத்துறையினரின் கேள்விகளை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்ற சசிகலாவின் மனு மீதான் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அன்னிய செலாவணி மோசடி வழக்கில், அமலாக்கத் துறையின் கேள்விகளை முன்கூட்டியே தெரிவிக்கக்கோரி சசிகலா தரப்பில் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு, நீதிபதி ஜாகீர் உசேன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அமலாக்கத்துறையினரின் கேள்விகளை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், கேள்விகளை முன்கூட்டியே தெரிவிப்பது சட்டப்படி தவறானது எனக் கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜாகீர் உசேன வரும் ஜூன் மாதம் 2ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார். தரணி பீச் ரிசார்ட் என்ற போலி நிறுவனம் மூலமாக வெளிநாட்டிலிருந்து கடன் பெற்று கோடநாடு எஸ்டேட் பங்குகளை வாங்கியதாகக்கூறி சசிகலா மற்றும் பாஸ்கரன் மீது அமலாக்கத்துறை கடந்த 1996 ஆம் ஆண்டு அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடரப்பட்டது.