\
sarathkumar
sarathkumarsarathkumar nattamai kudumbam

”நாட்டாமை குடும்பம் - என பச்சைக் குத்துங்கள்..” ஆதரவாளர்களிடம் சரத்குமார் சொன்ன விசயம்!

நாட்டாமை குடும்பம் என பச்சைக் குத்திக் கொள்பவர்கள் என்னை எளிதில் நேரடியாக சந்திக்கலாம் என தன்னை பின் தொடர்பவர்களுக்கு நடிகர் சரத்குமார் நிபந்தனை விதித்துள்ளார்.
Published on
Summary

சென்னை எழும்பூரில் பிறந்தநாள் விருந்தில் ஆதரவாளர்களை சந்தித்த சரத்குமார், ‘நாட்டாமை குடும்பம்’ என பச்சைக் குத்திக்கொள்வதை தனது குடும்ப அடையாளமாக முன்மொழிந்தார். விருப்பமுள்ள ரசிகர்கள் மட்டுமே இதை செய்யலாம், கட்டாயமில்லை என்றும், தானும் பின்னர் குத்திக்கொள்வேன் என்றும் கூறினார். ஏற்கனவே தேசியக் கொடியை தோளில் பச்சைக் குத்தியுள்ளேன், நான் தேசப்பற்று கொண்டவன் எனவும் வலியுறுத்தினார்.

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில், தனது பிறந்தநாளையொட்டி பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய ஆதரவாளர்களுக்கு நடிகர் சரத்குமார் விருந்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் மேடையில் சரத்குமார் பேசியதாவது, “நாட்டாமை குடும்பம்” என பச்சை குத்திக்கொள்வது நமது குடும்ப அடையாளமாக இருக்கும். எனது சிந்தனையில் திடீரென தோன்றிய எண்ணம்தான் இது. என் மீது பாசம் கொண்டவர்கள் விரும்பினால் நாட்டாமை குடும்பம் என பச்சை குத்திக்கொள்ளலாம். யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. நானும் அந்த முத்திரையை பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என நினைத்தேன். தற்போது படப்பிடிப்பு இருப்பதால் குத்திக்கொள்ள முடியவில்லை. ஆனால் நானும் குத்திக்கொள்வேன். எனது வலது தோள்பட்டையில் ஏற்கனவே தேசியக் கொடியை பச்சை குத்தியுள்ளேன். நான் தேசப்பற்று கொண்டவன்.

நமது குடும்பத்தில் உள்ளவர்கள் என்னை சந்திக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு ‘கிரீன் கார்டு’ போன்று பச்சை குத்திய அடையாளம் இருக்கலாம். கையில் அந்த பச்சை இருந்தால் என்னை எளிதில் நேரடியாக சந்திக்கலாம்.

என்னை வளர்த்து ஆளாக்கி உலகத்திற்கு என்னை நாட்டாமை , சுப்ரீம் ஸ்டார் என்று அறிமுகப்படுத்திய அனைவருக்கும் நன்றி. இது நம்முடைய நிகழ்ச்சி. எனது பிறந்தநாளை கொண்டாட வந்த அனைவருக்கும் நன்றி. அனைவரும் பசியுடன் இருக்கிறீர்கள்; நான் பேசினாலே உங்கள் அனைவரின் பசியும் ஆறிவிடும்.

150 ஆண்டுகள் எங்களை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்று சிலர் கூறினார்கள். உடல் ஆரோக்கியமாக இருந்தால் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் வாழலாம். நான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிடுவதில்லை. கண் வைத்துவிடுவார்கள் என்பதற்காக.

தீய பழக்கங்களில் ஈடுபடக்கூடாது. எந்த செயலில் ஈடுபட்டாலும் அதை அளவுடன் செய்ய வேண்டும். சில தீய பழக்கங்களை மறந்துவிடுவது நல்லது. இன்றைய சமூக வலைதள காலகட்டத்தில் பதிவிடுவது முக்கியமாகிவிட்டது. உண்மையாக இருந்தாலும், பொய்யாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் தகவல்கள் எளிதில் மக்களிடம் சென்றடைகின்றன. இன்றுள்ள சமூக வலைதள பிரியர்களுக்கு சரத்குமார் யார் என்பதே தெரியாமல் இருக்கலாம். நான் உதவி செய்தவர்கள் எத்தனை பேர் என்பது எனக்கேத் தெரியாது.

கோவிலுக்குச் செல்லும்போது சாமி கும்பிட்ட பிறகு புகைப்படம் எடுத்துக்கொள்வேன் என்று ரசிகர்களிடம் கூறுவேன். ஆனால் ரசிகர்கள், சாமி இங்கேதான் இருப்பார், நீங்கள் சென்றுவிடுவீர்கள் என்று கூறுவார்கள். அப்போது நடிகர்களை ரசிகர்கள் எந்த இடத்தில் வைத்து பார்க்கிறார்கள் என்பதுதான் எங்களுக்கு கிடைத்துள்ள பரிசு” என பேசியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com