தூய்மை பணியாளர்கள் போராட்டம்... நள்ளிரவு வரை நடந்தது என்ன?
பணிநிரந்தரம் செய்யக் கோரி சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நடத்திய 13 நாள் போராட்டம், நள்ளிரவில் அரங்கேறிய கைது நடவடிக்கை, தள்ளுமுள்ளு, சாலைமறியல் என, தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. இந்தப் போராட்டம் தொடங்கியது முதல் நள்ளிரவு கைது வரை நடந்தவற்றைப் பார்க்கலாம்...
வழக்கமாக வாகனங்களின் பரபரப்பில் இருக்கும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு அருகே உள்ள சாலை, கடந்த 13 நாள்களாக, தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் தவித்துப் போனது. சென்னை மாநகராட்சியில் ராயப்பேட்டை மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில், கடந்த ஒன்றாம் தேதி வழக்கம்போல வேலைக்குச் சென்றவர்கள், அதிர்ச்சியில் உறைந்தனர். அதற்குக் காரணம் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்ப்பதாக இருந்தால், பணியைத் தொடங்குங்கள் என்று அறிவுறுத்தப்பட்டதே. இவ்விரு மண்டலங்களிலும் தூய்மைப் பணிகளை மேற்கொள்வோர், ரிப்பன் மாளிகை அருகே அமர்ந்து போராட்டத்தைத் தொடங்கினர்.
தூய்மைப் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது, 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம்பளத்தைக் குறைக்கக் கூடாது என்ற 3 அம்சங்கள்தான் அவர்களின் பிரதான கோரிக்கை. இரவுபகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தை தொடர்ந்தனர். அண்மையில் கொட்டிய மழை கூட அவர்களுடைய போராட்டத்தை குலைக்கவில்லை. குப்பை அள்ளும் எங்களை, குப்பை போல கையாளுகிறார்கள் என்று ஆவேசமடைந்தனர்.
நெஞ்சுறுதியோடு போராட்டக் களத்தில் இருந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு திரண்டது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் அவர்களுடைய போராட்டத்திற்கு செவிகொடுத்தனர், நேரில் ஆதரவு அளித்தனர். ஆனால் அமைச்சர் சேகர்பாபு தலைமையில், மேயர் பிரியா, உள்ளிட்டோர் முன்னிலையில் அடுத்தடுத்து பல நாள்கள், பல சுற்றுகளாக நடந்த பேச்சுவார்த்தைகள் பலன் தரவில்லை. ஒரு கட்டத்தில், பேச்சுவார்த்தைக்கு வந்த அமைச்சர் சேகர்பாபுவிடம், தூய்மைப்பணியாளர்கள் குறித்து திமுக அளித்த வாக்குறுதி பற்றி செய்தியாளர்கள் வினவியபோது, எப்போது நாங்கள் வாக்குறுதி அளித்தோம் என பதில் கேள்வி கேட்டார். இதைத் தொடர்ந்து, திமுகவின் வாக்குறுதி மற்றும் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எழுதிய கடிதம் வைரல் ஆகின.
இப்படியான சூழலில் தான், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக, தேன்மொழி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த தலைமை நீதிபதி, அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறி, சட்டத்திற்கு உட்பட்டு அனைவரையும் அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில்தான் நள்ளிரவில் அரங்கேறியது கைது நடவடிக்கை. கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியதை தூய்மைப் பணியாளர்கள் ஏற்காததால், அவர்களை கைது செய்து, வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றியது காவல் துறை. வாக்குவாதம், தள்ளுமுள்ளு, கண்டன முழக்கங்கள் என, அந்த நள்ளிரவுப் பொழுது, பெரும் போர்க்களமாகக் காட்சியளித்தது.
கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் திருவான்மியூர், வேளச்சேரி, ஆலந்தூர் பகுதிகளில் உள்ள சமுதாய நலக்கூடத்துக்கு கொண்டு சென்றனர். வேளச்சேரிக்கு கொண்டு செல்லப் பட்டவர்கள், பேருந்தில் இருந்து இறங்கி, நூறு அடி சாலையில் இறங்கி மறியலில் ஈடுபட்டனர். நள்ளிரவு கைது நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. பணிபாதுகாப்பு என்ற நியாயமான கோரிக்கைக்கு, பதில் சொல்லப்போவது நீதிமன்றமா? அரசாங்கமா? என்ற கேள்வியே தூய்மைப் பணியாளர்களின் முன் எழுந்து நிற்கிறது...