தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் வழக்கறிஞர்கள் மீது வழக்கு
தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் வழக்கறிஞர்கள் மீது வழக்குweb

தூய்மை பணியாளர்கள் போராட்ட விவகாரம்|வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை கைவிட முடியாது - காவல்துறை

தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவளித்து போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை கைவிட முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on
Summary

தூய்மை பணியாளர்கள் போராட்டம் 13 நாட்களுக்கு பிறகு முடிவுக்கு வந்தது. காவல்துறை, வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை கைவிட முடியாது என தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை காவல்துறை அத்துமீறி நடத்தியதாக கூறப்படும் விவகாரம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கலாம் என நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர்.

சென்னை ரிப்பன் மாளிகை முன்பு கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கிய தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் 13 நாட்களுக்கு பிறகு, நள்ளிரவில் அரங்கேறிய கைது நடவடிக்கை, தள்ளுமுள்ளு, சாலைமறியல் என பரபரப்போடு முடிவுக்கு வந்தது.

இரவு பகலாக மழை, வெயிலைப் பொருட்படுத்தாமல், “தங்களின் பணியை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தங்களின் சம்பளத்தைக் குறைக்கக் கூடாது” ஆகிய 3 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்திவந்தனர்.

தூய்மை பணியாளர்கள் போராட்டம்
தூய்மை பணியாளர்கள் போராட்டம்pt web

இந்நிலையில் 13வது நாள் நள்ளிரவில் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதற்காக தூய்மை பணியாளர்களும், அதற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்களும் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு திட்டங்களை தமிழக அரசு அறிவித்த்தது.

இந்த சூழலில் போராட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை கைவிட முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்குகளை கைவிட முடியாது..

தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதற்காக வழக்கறிஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை கைவிட முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தர்ப்பு வாதங்களை முன்வைத்தார். இதுகுறித்து பேசிய அவர், வழக்கறிஞர்களின் செயலால் அரசு சொத்துகள் மட்டுமின்றி தனி நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளை கைவிட்டால் அது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும். வழக்கறிஞர்களின் நடத்தையால் பாதிக்கப்பட்ட பெண் காவலர்களுக்கு என்ன நீதி?, வழக்கறிஞர்கள் என்பதற்காக சட்டத்தை மீறக்கூடாது என தெரிவித்தார்.

அப்போது சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்கள் தானே போராட்டத்தில் ஈடுப்பட்டனர் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, போராடிய துப்புரவு பணியாளர்களுக்கு ஆதரவாக அரசு இருக்கிறது. 2020ம் ஆண்டிலிருந்து தனியார் மயம் இருக்கிறது. உள் நோக்கத்துடன் போராட்டம் தூண்டி விடப்பட்டது. நோட்டீஸ் அனுப்பாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுப்பட்ட வழக்கறிஞர்களை அத்துமீறி நடத்தியதாக போலீசார் மீதும் குற்றச்சாட்டு உள்ளதே என நீதிபதிகள் எதிர்கேள்வி எழுப்ப, தவறு செய்திருந்தால் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கலாம். போலீசாரும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் தான் என்று தெரிவித்தனர்.

வழக்கறிஞர்கள் தரப்பில் பேசிய மனுதாரர், கைது செய்யப்பட்டதில் இருந்து விடுவிக்கப்படும் வரை வழக்கறிஞர்கள் ரத்தம் வரும் வரை கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை காவல்துறை அத்துமீறி நடத்தியதாக கூறப்படும் விவகாரம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கலாம் என கருதுகிறோம். போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை அழைத்து பேசிய போது காவல்துறை அவர்களை அத்துமீறி நடத்தியதாக தெரிகிறது. உண்மையை கண்டறிவதற்காகவே இந்த ஒரு நபர் ஆணையம் அமைக்கலாம் என கருதுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com