’குப்பைகளை போல தூக்கி எறிகிறது அரசு..’ நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட பரபர வாதங்கள்!
சென்னை ரிப்பன் மாளிகை முன்பு கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கிய தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் இன்றுடன் 12 நாட்களை நிறைவு செய்கிறது. “தங்களின் பணியை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தங்களின் சம்பளத்தைக் குறைக்கக் கூடாது” ஆகிய 3 பிரதான கோரிக்கைகளை முன்வைத்தே தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாக மழை, வெயிலைப் பொருட்படுத்தாமல் போராடி வருகிறார்கள்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதி கே.சுரேந்தர் முன் விசாரணைக்கு வந்தது.
குப்பைகளை போல தூக்கி எறியக்கூடாது..
அப்போது மனுதாரர் சங்கம் தரப்பில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் வழங்கக் கோரியும் அளிக்கப்பட்ட விண்ணப்பம், தொழிலாளர் நீதிமன்ற விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது, தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க முடியாது. அதற்கு தொழிலாளர் நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும் என வாதிடப்பட்டது.
மாநகராட்சியின் இந்த நடவடிக்கையால் 2000 தூய்மைப் பணியாளர்களின் வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. முதலில் தொழிலாளர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்க வேண்டும். ஒரு மாதத்தில் தொழிலாளர் நீதிமன்றம் முடிவெடுக்கட்டும். ஆகஸ்ட் 15 முதல் மீண்டும் பணிக்கு திரும்புகின்றோம். 15 ஆண்டுகள் பணியாற்றியவர்களை குப்பைகளை போல தூக்கி எறியக்கூடாது என வாதிடப்பட்டது.
தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கினாலும், தற்போது பெறும் ஊதியத்தை விட குறைவான ஊதியமே வழங்கப்படும் எனவும் 750 ரூபாய்க்கு மேல் தினமும் ஊதியம் பெறும் நிலையில், தனியார் நிறுவனத்தால் 500 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் எனவும் மனுதாரர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பணியாளர்களை வீசி எறியப் போவதில்லை..
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், பணியாளர்களை வீசி எறியப் போவதில்லை. வேலையை விட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள். ஒப்பந்ததாரர் மூலம் பணி வழங்கப்படும். சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 11 மண்டலங்களில் தூய்மைப் பணி ஏற்கனவே தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டு விட்டன. 5, 6வது மண்டலங்களில் தூய்மைப் பணி தனியாருக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 2000 தூய்மைப் பணியாளர்களுக்கும், ஒப்பந்த நிறுவனம், ஊதியத்துடன், வருங்கால வைப்பு நிதி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட சலுகைகளுடன் வேலை வழங்கப்பட்டு, வேலை பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஒப்பந்த நிறுவனம் தரப்பில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவது அரசின் கொள்கை முடிவு. இந்த முடிவில் விதிமீறல் இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். இதுவரை 341 பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. 1,900 பணியாளர்கள் தேவை என்ற நிலையில், பணிக்கு சேர்வதற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்க தயார் என தெரிவிக்கப்பட்டது.
இருந்தாலும், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பணிக்கு திரும்புவதற்காக ஒப்பந்த நிறுவனம் காத்திருக்கிறது. மற்ற மண்டலங்களில் தனியார்மயமாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இரு மண்டலங்களில் ஏன் மேற்கொள்ளக் கூடாது என கேள்வி எழுப்பப்பட்டது.
இறுதியாக, தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு சேர ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை அளித்திருந்த அவகாசத்தை, ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக சென்னை மாநகராட்சி மற்றும் ஒப்பந்தம் பெற்ற தனியார் நிறுவனம் தரப்பிலும் உறுதி தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி கே.சுரேந்தர், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.