சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் நள்ளிரவில் கைது..!
சென்னையில் 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களைக் குண்டுக்கட்டாக கைது செய்துள்ளது தமிழக காவல்துறை.
தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், மக்கள் சிரமத்துக்குள்ளாவதாகவும் தாக்கல் செய்யப்பட பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், போராட்டக்காரர்கள் களைந்து செல்லுமாறும், காவல்துறை போராட்டக்காரர்களை சட்டத்திற்குட்பட்டு முறையாகக் கைது செய்யுமாறும் உத்தரவிட்டது.
ரிப்பன் மாளிகை இன்று மாலை முதலே சுதந்திர தினத்துக்கான வேலைகளில் மும்முரமானது. அதே சமயம், போலீஸாரும் ரிப்பன் மாளிகைக்கு வெளியே குவிக்கப்பட்டனர். காலி பேருந்துகளும் தயார் நிலையில் வரவழைக்கப்பட்டன. இன்று மாலை நான்கு மணியளவில் அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர் பாபு உள்ளிட்ட அரசுத் தரப்பு குழு, போராட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்த இடத்தைவிட்டு வெளியேற மாட்டோம் என்றும், இதே இடத்தில் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்றும் போராட்டக்குழு அறிவித்தது. ஆனால், நள்ளிரவில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த , அவர்களை குண்டுக்கட்டாக அரசு பேருந்துகளில் ஏற்றி கைது செய்திருக்கிறது தமிழக அரசு.
இதுகுறித்து, தன் சமூக வலைத்தள பக்கத்தில் தமிழிசை சௌந்திரராஜன் கருத்து தெரிவித்திருக்கிறார். " போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களை வலுக்கட்டாயமாக அராஜக முறையில் கைது செய்யப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தான் செயலாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள்.. நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன் அவர்களின் இந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றால் ஆக்கபூர்வமாக முதலமைச்சர் வந்து பேசி ஒரு ஆரோக்கியமான முறையில் அப்புறப்படுத்தியிருக்க வேண்டும்... அப்படி இல்லாமல் கொடூரமாக அவர்கள் கைது செய்து கொண்டிருப்பது மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது . ஆனால் அவர்களைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் முதல்வர் கேளிக்கை படம் பார்த்துக் கொண்டிருப்பது அதைவிட வேதனை.. இதற்கெல்லாம் 2026 தான் பதில் சொல்ல வேண்டும்..." என பதிவிட்டிருக்கிறார்.