விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம்பெயர்ந்தார் சனிபகவான்..!
சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேசுவரர் கோயிலில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்துள்ளனர்.
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெயரும் சனிபகவான் தற்போது விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இன்று காலை 10.01 மணிக்கு இடம்பெயர்ந்தார். சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திருநள்ளாறு கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். சனிபெயர்ச்சி நடைபெற்ற சரியாக 10.01 மணிக்கு சனி பகவானுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சனி பகவானை தரிசனம் செய்தனர். அதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் வருகை அதிகமிருப்பதையொட்டி, பாதுகாப்பு பணியில் 1500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருநள்ளாறில் பல்வேறு இடங்களில் 200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நளன் குளத்தில் பக்தர்கள் நீராட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காரைக்கால் செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.