நூதன முறையில் மணல் திருட்டு - 2 லாரிகள் பறிமுதல்
நாமக்கலில் இருந்து சேலம் வழியாக நூதன முறையில் மணல் கடத்திய 2 லாரிகளை பறிமுதல் செய்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு மணல் குவாரிகள் மூடப்பட்ட நிலையில் மணலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, தற்போது எம்சாண்ட் எனும் செயற்கை மணல் கட்டுமான தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மணல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து லாரிகளில் விதிமுறைக்கு மாறாக மணல் கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி செல்லும் லாரிகளில் நூதன முறையில் மணல் கடத்துவதாக சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்களுக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சரக்கு லாரிகளை போல் வந்த இரண்டு லாரிகளை பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது சோதனையில் சரக்கு லாரிகளை போல் வடிவமைத்து, மணல்களை கொட்டி அதன் மேல் தேங்காய் மட்டைகளை போட்டு முழுவதும் மூடிய படி இருந்தது தெரியவந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மணல் லாரி உரிமையாளர்கள், உடனடியாக வருவாய் துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட 2 லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.