மணல்குவாரி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுமி பலி
மணல்குவாரி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளத்தில் 12 வயதான குழந்தை விழுந்து பலியானதால், குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகள் மாலினி (12). இவர் திருச்சியிலுள்ள பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை காலமாகிவிட்டதால் இவருடைய குடும்பம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள திருச்சென்னம்பூண்டியில் அமைந்துள்ள அவரது பாட்டி வீட்டில் வசித்து வருகிறது.
இந்நிலையில், மாலினி உள்பட 3 குழந்தைகள் அருகிலுள்ள கொள்ளிடம் ஆற்றில் நேற்று மாலை குளிக்கச் சென்றனர். அப்போது மாலினி தண்ணீரில் மூழ்கியதாகத் தெரிகிறது. அக்கா தண்ணீரில் மூழ்கியதை பார்த்த அவரது தங்கை அக்கம் பக்கத்தினரை அழைத்து நடந்த சம்பவத்தை கூறியதாகச் சொல்லப்படுகிறது.
உடனடியாக அங்கு வந்து மாலினியை மீட்ட மக்கள் அவரை கோவிலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அதன் பின்னர் அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மாலினியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே இறந்து விட்டதாக கூறியிருக்கிறார்கள்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தோகூர் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சம்பவ இடத்திற்கு சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருவதும், அங்கு செல்வதற்காக, சாலை அமைப்பதற்காக கொள்ளிடம் ஆற்றில் பள்ளம் தோண்டப்பட்டதும் அதில்தான் மாலினி ஆழம் தெரியாமல் விழுந்து மூழ்கியதும் தெரியவந்தது.
மாலினி இறந்ததை கேட்ட பெற்றோர் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆகியோரும் கலந்து கொண்டனர். தகவலறிந்த வருவாய்த் துறையினர், காவல் துறையினர் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கொள்ளிடம் ஆற்றில் ஏற்கெனவே சில முறை அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டது. அப்போது அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் குவாரி அகற்றப்பட்டது. இதனிடையே ஒரு மாதத்துக்கு முன்பு மீண்டும் இப்பகுதியில் மணல் குவாரி அமைக்கப்பட்டது. இதனை எதிர்த்து மக்கள் போராட்டமும் நடத்தினர்.