ஆற்றில் மணல் திருட்டு : வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்
காவிரி ஆற்றில் தொடரும் மணல் திருட்டு நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மணல் தட்டுப்பாட்டால் முடங்கின. இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காவிரி ஆற்றில் அனுமதியில்லாமல் மணலை அள்ளி திருட்டுத்தனமாக விற்பனை செய்வது தொடர்ந்து வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரை பகுதியான ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், பிலிக்கல்பாளையம், வெங்கரை, பரமத்தி வேலூர், பாலப்பட்டி, மணப்பள்ளி, மோகனூர், ஒருவந்தூர் ஆகிய அனைத்து பகுதிகளிளும் ஆற்றில் தொடர்ந்து இரவுபகலாக மணல் திருட்டு நடைபெற்று கொண்டே வருகிறது.
காவிரி ஆற்றங்கரை அருகில் உள்ளவர்கள் மணலை சிறு சிறு மூட்டைகளில் எடுத்து வந்து அடுக்கி வைத்து, பின்னர் இரு சக்கர வாகனத்தில் எடுத்து சென்று பின் லாரிகளில் ஏற்றி கடத்தி செல்லப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினசரி மணல் திருடப்பட்டு வரும் நிலையில் கனிமவளம் துறை, வருவாய் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மணல் திருட்டிற்கு துணை போவதாக சமூகஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே இது குறித்து கனிம வளத்துறை துணை இயக்குனரிடம் கேட்டபோது. இது குறித்து ஏதும் தெரியாது என பதிலளித்துள்ளார்.
- செய்தியாளர் எம்.துரைசாமி,நாமக்கல்

