சிதிலமடைந்து கிடக்கும் தமிழகத்தின் 100வது சமத்துவபுரம் : பொதுமக்கள் கோரிக்கை
மேலூர் அருகே சிதிலமடைந்து கிடக்கும் சமத்துவபுரத்தை சீரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 2001ம் ஆண்டு சமத்துவப்புரம் கட்டப்பட்டது, தமிழகத்தின் 100வது சமத்துவப்புரமான இங்கு பொதுமக்கள் குடியிருப்பு, சத்துணவுக்கூடம், கல்விக்கூடம், குடிமைப்பொருள் அங்காடி, பூங்கா என பல்வேறு சிறப்புகளுடன் திறக்கப்பட்டது,
இந்நிலையில், தற்போது இப்பகுதி போதிய பராமரிப்பு இல்லாமல் கருவேல மரங்கள் நிறைந்த வனப்பகுதி போல் காட்சியளிக்கிறது. மேலும் இங்கு போதிய சாலை வசதிகள், கழிவுநீர் வாய்க்கால்கள் இல்லாததால் மழைக்காலங்களில் தண்ணீர் வீடுகளுக்குள் வருவதாக அப்பகுதி கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேபோல், இங்குள்ள சிறுவர் பூங்காவில் எந்தவிதமான விளையாட்டு உபகரணங்கள் இன்றி, சிலைகள் சேதமாகி உள்ளது. இதனால் இந்த சமத்துவபுரத்தினை புனரமைத்து மீண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.