கோரை புற்கள் மூலம் கைவினை பொருட்கள்... அசத்தும் சேலம் பெண்!

தன்னம்பிக்கையோடு சிறந்த முன்னெடுப்புகளும் இருந்தால் மிகப்பெரிய வெற்றி பெறலாம் என்பதற்கான எடுத்துக்காட்டாக சேலம் மாவட்டம் ஆத்தூரில் பெண் ஒருவர் கைவினை பொருட்களில் சாதனை படைத்து வருகிறார். இது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
கைவினைப்பொருள்கள் செய்யும் தொழில் முனைவோர் நிஷா
கைவினைப்பொருள்கள் செய்யும் தொழில் முனைவோர் நிஷாPT

சிகிராஸ் எனும் கோரை புற்கள் மூலம் கைவினை பொருட்கள் தயாரிக்கும் நிஷா என்ற பெண்ணொருவர், தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் வர்த்தகம் செய்துவருகிறார். மேலும் 80-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பும் அளித்துவருகிறார். கைப்பைகள், கூடைகள் போல சுமார் 50 கைவினை பொருட்களை செய்து வரும் இவர், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக இத்தகைய பொருட்களை செய்துவருவதால் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக சொல்கிறார்.

நவீன யுகத்தில், பெண்கள் விவசாயம் முதல் விஞ்ஞானம் வரை பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். அந்த வகையில், சேலம் ஆத்தூர் உடையார்பாளையத்தை சேர்ந்த நிஷா, கைவினை பொருட்களை உலகளவில் விற்பனை செய்து வருகிறார். இவர், கடந்த 2007-ஆம் ஆண்டு துரை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் தம்பதியினர் மசாலா பொருட்கள் தயாரித்து விற்பனை செய்துவந்த நிலையில், நிஷாவிற்கு ஓவியம் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் வடமாநில கொலு பொம்மைகளை வாங்கி வண்ணம் தீட்டி விற்று வந்துள்ளார்.

கைவினைப்பொருள்கள் செய்யும் தொழில் முனைவோர் நிஷா
‘உனை நான் கொல்லாமல்; கொன்று புதைத்தேனே... மன்னிப்பாயா’ - தமிழை கரம்பிடித்த கவிஞர் தாமரை பிறந்தநாள்!

இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு அசாம் உள்ளிட்ட வடமாநிலங்களில் விளையும் சிகிராஸ் எனும் கோரை புற்களை வாங்கி, இயந்திர உதவிகள் இல்லாமல் கைகளாலே கைப்பைகள், கூடைகள் உள்ளிட்டவற்றை தயாரித்து தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் வர்த்தகம் செய்து வருகிறார்.

"சிகிராஸ் வகையான புற்களை வாங்கி 50 வகையான பொருட்களை செய்கிறோம். நெகிழிக்கு மாற்றாக நாங்கள் இதை கொண்டு வந்திருப்பதால் மக்கள் வரவேற்பு கிடைத்துள்ளது"

நிஷா

ஐந்து கிலோ எடை கொண்ட ஒரு கட்டு சிகிராஸ் வகை புற்கள் முன்பு 400 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 1,100 ரூபாயாக உள்ளதாம். இதில் கைவினைப்பொருட்கள் செய்துவரும் நிஷா, தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கோவை சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கடை அமைத்து அங்கெல்லாம் 80-க்கும் மேற்பட்ட பெண்களை பணியில் அமர்த்தி இருக்கிறாராம். அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கங்கள் பலரும் இவரது வாடிக்கையாளராக உள்ளனரென சொல்கிறார்.

இவ்வகையாக தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களை ஐந்தாண்டுகள் முதல் பத்தாண்டுகள் வரை பயன்படுத்தலாம் என்றும் கூறுகின்றார் நிஷா.

விடாமுயற்சியும், கற்பனைத் திறனும், தொழில் நுணுக்கமும் இருந்தால் உலகளாவிய வர்த்தகமும் செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார் நிஷா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com