செயின் பறிப்புக் கொள்ளையர்களை எதிர்த்துப் போராடிய வீரப்பெண்
நாமக்கல்லில் செயின் பறிப்புக் கொள்ளையர்களை எதிர்த்துப் போராடிய பெண்ணால் அவரது 7 சவரன் தங்கச் சங்கிலி தப்பியது.
சேலம் சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் சுமதி. இவர் தனது மகனின் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு வழங்க நாமக்கல்லுக்குச் சென்றிருந்தார். நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவில் அருகே உள்ள பிரதான சாலையில் அவர் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவர், சுமதியை மறித்து அவர் கழுத்தில் இருந்த நகைகளை பறித்துள்ளனர்.
இதனைச் சற்றும் எதிர்பார்க்காத சுமதி உடனடியாகக் கொள்ளையனின் சட்டையைப் பிடிக்க, உஷாரான திருடன் கையில் கிடைத்த 2 சவரன் நகையுடன் இருசக்கர வாகனத்தில் தப்பியதாகத் தெரிகிறது. சுமதியின் தைரியமான செயலால் அவரது கழுத்தில் இருந்த 7 சவரன் தாலிக் கொடி தப்பியது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் காவல்துறையினர், கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.