சேலம்: நீதிமன்ற வளாகத்திலேயே நீதிபதியை கத்தியால் குத்திய அலுவலக ஊழியர்
சேலம் நீதிமன்ற வளாகத்தில் அலுவலக ஊழியர் ஒருவர், நீதிபதியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தில் தொடர்புடைய நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் நான்கில் நீதிபதியாக பணிபுரிந்து வருபவர் பொன் பாண்டியன். இந்நிலையில், இன்று காலை நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள நீதிபதி அறையில் பொன் பாண்டியன் இருந்தார்.
அப்போது அங்கே வந்த நீதிமன்ற ஊழியர் பிரகாஷ் என்பவர் பணிமாறுதல் குறித்து நீதிபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது நீதிமன்ற ஊழியர் பிரகாஷ் தனது கையில் வைத்திருந்த கத்தியால் நீதிபதியை குத்தியுள்ளார். இதில் மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து நீதிபதி கூச்சலிடவே அங்கிலிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பிரகாஷ்யை பிடித்து அஸ்தம்பட்டி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

