சேலம் பல்கலைக்கழகத்திற்கு ரூ. 5 கோடி சேவை வரி: உயர் நீதிமன்றம் தடை
கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கியதற்காக, வட்டியுடன் சேர்த்து 5 கோடி ரூபாய் சேவை வரி செலுத்தும்படி சேலம் பெரியார் பல்கலைக் கழகத்திற்கு ஜி.எஸ்.டி. ஆணையாளர் அனுப்பிய நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக, சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்தின் கீழ், 127 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன.
2012 முதல் 2017 ஆம் ஆண்டு காலத்தில், 97 கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்குவதற்காக நடத்தப்பட்ட ஆய்வுகள், புதிய படிப்புகள் தொடங்க அனுமதி அளித்தது, கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கொடுத்த வகையில், பெறப்பட்ட கட்டணத்துக்கு சேவை வரி செலுத்தவில்லை எனக்கூறி, ஜி.எஸ்.டி. ஆணையாளர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதற்கு பல்கலைக் கழகம் சார்பில் நேரில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், அபராதத்துடன் 5 கோடி ரூபாய்க்கு சேவை கட்டணம் செலுத்தும்படி, ஜி.எஸ்.டி. ஆணையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது சட்டவிரோதமாகும்.
சேலம் பல்கலைக் கழகம் மாநில அரசின் நிதியுதவியால் செயல்படக் கூடிய ஒன்று. அது, சேவை வரிக் கட்டண வரம்புக்குள் வராது. ஆகவே, சேவை வரி செலுத்த வேண்டும் என்ற நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், சேலம் பல்கலைக்கழகம் சேவை வரி செலுத்த வேண்டும் என்ற ஜி.எஸ்.டி. ஆணையாளரின் நோட்டீஸ் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனு குறித்து விளக்கம் அளிக்கும்படி ஜி.எஸ்.டி. ஆணையாளர் மற்றும் தலைமை முதன்மை ஜி.எஸ்.டி. ஆணையாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.